Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

275 லட்சம் டன் நெல் கொள்முதல்-அரசு உறுதி!

275 லட்சம் டன் நெல் கொள்முதல்-அரசு உறுதி!
, வெள்ளி, 20 ஜூன் 2008 (17:59 IST)
இந்த வருடம் பொது விநியோகத்திற்கு தேவையான அளவு நெல் கொள்முதல் செய்ய முடியும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சார்பில் விவசாயிகளிடம் இருந்து நெல், கோதுமை ஆகியவைகளை இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்கிறது. இது நேரடியாகவும், மாநில நுகர்பொருள் வாணிபக் கழகங்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கொள்முதல் செய்கிறது.

இந்த வருடம் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நெல் கொள்முதல் இலக்கான 275 லட்சம் டன் அளவிற்கு கொள்முதல் செய்து விடுவோம். இந்த இலக்கை எட்டிவிட முடியும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று இந்திய உணவு கழகத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அலோக் சின்கா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த பருவத்தில் இது வரை 260 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இலக்குக்கு 15 லட்சம் டன் குறைவாக உள்ளது. கடந்த வருடம் 251 லட்சத்து 7 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

கோதுமை கொள்முதல் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் முடிந்துவிடும். ஆனால் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை வருடம் முழுவதும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

கரிப் பருவத்தில் உற்பத்தியான நெல் அக்டோபர் மாதத்திலும், ரபி பருவத்தில் உற்பத்தியான நெல் மார்ச் மாதத்திலும் விற்பனைக்கு வருகிறது.

தற்போது பருவ மழை தொடங்கி உள்ளதால், விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால், நெல் விற்பனைக்கு வருவது பாதிக்கப்பட்டுள்ளது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

இது குறித்து அலோக் சின்கா கூறுகையில், பருவ மழையால் எந்த பாதிப்பும் இல்லை. நாங்கள் இந்தியாவின் கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கொள்முதல் செய்து இலக்கை அடைந்து விடுவோம். இதில் சில மாநிலங்களில் இரண்டு போகம் நெல் பயிர் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.

நெல் ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதுனுடன் மாநில அரசுகளும் போனஸ் தொகையை அறிவித்துள்ளன. இந்த புதிய விலை கரிப் பருவத்தில் இருந்து அமலுக்கு வருகிறது.

தற்போது ஆதார விலையை உயர்த்தியுள்ளதால், விவசாயிகள் நெல் விற்பனை செய்ய வாணிப கழக மையங்களுக்கு கொண்டு வருவதில்லை. நெல் விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பு வைத்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil