Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல்லுக்கு குறைவான விலை- அரசு மீது குற்றச்சாட்டு.

நெல்லுக்கு குறைவான விலை- அரசு மீது குற்றச்சாட்டு.
, செவ்வாய், 17 ஜூன் 2008 (16:58 IST)
மத்திய அரசு நெல் விலை ஆதார விலையை குறைவாக நிர்ணயித்துள்ளது என்று விவசாய விளை பொருட்களுக்கான விலை நிர்ணய குழுவின் முன்னால் தலைவர் டி.ஹக் குற்றம் சாட்டினார்.

இவரின் தலைமையிலான விவசாய விளை பொருட்களுக்கான விலை நிர்ணய குழு, பொதுவான ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,000மும், சன்னரக நெல்லுக்கு ரூ.1,050 வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு வழங்கிய பின் குழுவின் தலைவர் பொறுப்பில் இருந்து ஹக் ஓய்வு பெற்றார்.

ஆனால் மத்திய அரசு, விவசாய விளை பொருட்களுக்கான விலை நிர்ணய குழு பரிந்துரைத்த விலையை விட, குறைவான
விலையை நிர்ணயித்துள்ளது.

மத்திய அரசு பொதுவான ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.850, சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.875 என நிர்ணயித்தது.

விவசாய விளை பொருட்களுக்கான விலை நிர்ணய குழு பரிந்துரைத்த விலையை விட, மத்திய அரசு குறைவான விலையை நிர்ணயித்திருப்பது, இந்த குழுவின் பங்கை சீர்குலைத்து குறைந்த பட்ச ஆதார விலை என்ற முறையை நீக்கும் முயற்சியாகும்.

அத்துடன் வியாபாரிகளின் தயவில் விவசாயிகள் இருக்கும்படி தள்ளும் முயற்சியாகும் என்று ஹக் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், விவசாய விளை பொருட்களுக்கான விலை நிர்ணய குழுவில் பல்வேறு நிபுணர்கள், விவசாயிகள் இடம் பெற்று உள்ளனர். இது சுயேச்சையான குழு. இந்த குழு விவசாய விளை பொருட்களின் ஆதார விலையை நிர்ணயிக்க அதிகாரம் பெற்ற அமைப்பாகும்.

இதன் பரிந்துரையை, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் பரிசீலனைக்கு மத்திய அரசு அனுப்பியது தவறானது என்று குற்றம் சாட்டினார்.

ஹக் தலைமையிலான விவசாய விளை பொருட்களுக்கான விலை நிர்ணய குழு, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டும், உரம், பூச்சி மருந்து, தொழிலாளர்கள் கூலி போன்ற செலவுகளை கணக்கிட்டும், அத்துடன் உலக சந்தை, உள்நாட்டு சந்தையின் விலை நிலவரம், மொத்த அரிசி தேவை, தற்போதைய உற்பத்தி நிலவரத்தை கருத்தில் கொண்டு, முதல் முறையாக உற்பத்தி செலவை விட 10 விழுக்காடு இலாபம் என்ற அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.1,000 என நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

உலக சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற அதிக அளவு அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகள் உள்நாட்டு தேவையை ஈடுகட்டவும், விலை உயர்வை தடுக்கவும் அரிசி ஏற்றுமதியை தடை செய்துள்ளன. மற்றொரு புறம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் ஒரு அணியில் திரண்டு விலை, உற்பத்தியை கட்டுப்பாடுகளை நிர்ணயிப்பது போல், தாய்லாந்து போன்ற நாடுகள் அரிசி ஏற்றுமதி நாடுகளிலை ஒரு அணியில் திரடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

உலக சந்தையில் அரிசி கிடைக்கும் அளவை விட, அதன் தேவை அதிக அளவு உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதத்தில் அரிசி விலை 68 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கோதுமை, அரிசி, நவதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் போன்ற விவசாய விளை பொருட்களுக்கு அரசு ஆதார விலையை நிர்ணயிதத்து அறிவிப்பதில் காலம் தாழ்த்துவதால், விவசாயிகள் எதை பயிரிடுவது என்பதை முடிவு செய்ய முடியாமல் உள்ளனர். இதனால் இவைகளின் உற்பத்தி குறைகின்றது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

கோதுமையின் விலையை அதிகரித்து தர வேண்டும் என்று விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளிடம் கோரி வந்தனர். இவர்களின் கோரிக்கைகளில் அரசு கவனம் செலுத்தாமல் மெத்தனமாக இருந்தது. இதனால் பல விவசாயிகள் வணிக பயிருக்கு மாறினார்கள். கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் அரசு பற்றாக்குறையை சமாளிக்க அதிக விலை கொடுத்து கோதுமை இறக்குமதி செய்தது.

இதனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கோதுமை ஆதார விலையை குவின்டாலுக்கு ரூ.1,000 என உயர்த்தி அறிவிக்கும் நிர்ப்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. இதற்கு பிறகு கோதுமை ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியது. தற்போது கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ளது.

நெல் பயிரிடும் விவசாயிகளும், கோதுமைக்கு வழங்கப்படுவது போல் நெல்லுக்கும் ஆதாரவிலை குவின்டாலுக்கு ரூ.1,000 என உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். விவசாய சங்கங்களும் பல போராட்டங்களை நடத்தியுள்ளன. பல்வேறு கட்சிகளும் நெல் பயிரிடும் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் விவசாய விளை பொருட்களுக்கான விலை நிர்ணய குழு பரிந்துரைத்த விலையை விட, மத்திய அரசு நெல்லுக்கு குறைவான விலையை நிர்ணயித்துள்ளது.

இந்தியாவில் அரிசி உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் உற்பத்தியை அதிகரிக்க சரியான விலை, சந்தை வாய்ப்பு, தொழில் நுடப உதவி செய்தால், அதிக அளவு நெல் உற்பத்தி செய்ய முடியும். நெல் ஆதார விலையை அதிகரிப்பதால் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும். கோதுமை உற்பத்தியை அதிகரித்தது போல், விவசாயிகளும் ஆர்வமுடன் நெல் உற்பத்தியை அதிகரிப்பார்கள். உற்பத்தி உயர்வதால், உள்நாட்டில் விலை அதிகரிக்காமல் தடுக்கம முடியும் என்று ஹக் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கோதுமை தட்டுப்பாடு முழுமையாக நீங்கவில்லை. இந்நிலையில் மத்திய அரசு குறைவாக நெல் ஆதார விலையை நிர்ணயித்து இருப்பதால், உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட தேவையில்லை என்று கூறிய ஹக், பல நாடுகளில் அரிசி தட்டுப்பாட்டால் மக்களிடையே கொந்தளிப்பும், கலவரமும் ஏற்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டினார்.

Share this Story:

Follow Webdunia tamil