டெல்டா மாவட்ட பாசன வசதிக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.
காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டு தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல் இந்த ஆண்டும் கடந்த 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தமிழக அரசு தண்ணீர் திறந்து விட்டது.
இந்த தண்ணீர் கல்லணைக்கு வந்து சேர்ந்தது. இதைத் தொடர்ந்து பாசனத்திற்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழக அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சித் தலைவர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்லணையில் இருந்து 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் வெண்ணாறில் இருந்து 4,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 12ம் தேதி 103.31 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,912 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அன்று மாலை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.55 அடி. அணையிலிருந்து விநாடிக்கு 14,937 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு 2,205 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.