கலப்பு உரத்தின் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.
இந்த விலை குறைவினால் கலப்பு உரத்தின் விலை 1 டன் ரூ.1,416 ஆகவும், 1 மூட்டையின் விலை ரூ.70 ஆகவும் குறையும்.
யூரியா மற்றும் டை அமோனியம் பாஸ்பேட் (டிஏபி) போன்ற உரங்கள் அதிக அளவில் பயன்படுத்துவதற்கு பதிலாக, மண்ணிற்கு தேவையான உயிர் சத்துக்கு ஏற்றார் போல் கலப்பு உரங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் கலப்பு உரங்கள் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் பொருளாதாக குழுக் கூட்டத்தில் உரம் விலை குறைப்பது பற்றிய முடிவு எடுக்கப்பட்டது.
பல மாநிலங்களில் உரம், விதை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், மத்திய அமைச்சரவையின் பொருளாதாக குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்றைய விலை குறைப்பால் கலப்பு உரத்தின் விலை டன் ரூ.1,416 ஆக குறையும். நாடு முழுவதும் உரத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், உரம் கிடைப்பதை உறுதி படுத்துவதாக உர அமைச்சகம் உறுதி அளித்துள்ளதென தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் ஒரே விலையில் உரம் கிடைப்பதற்கு ஏற்றவகையில், உர ஆலைகளில் இருந்து கொண்டு செல்லப்படும் உரத்திற்கு வழங்கும் போக்குவரத்து மானியத்தை ஒரே மாதிரி வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதே நேரத்தில் யூரியா, டை அமோனியம் பாஸ்பேட், எஸ்.எஸ்.பி. ரக உரங்களின் விலை குறைக்கப்படவில்லை.
இந்த வகை உரங்களில் நைட்ரஜன், பாஸ்பரஸ் அல்லது பொட்டாஸ் போன்ற ஒருவகை உயிர் சத்து மட்டும் இருக்கும். கலப்பு உரத்தில் குறைந்தபட்சம் இரண்டு வகை உயிர் சத்து இருக்கும்.
தற்போது உர ஆலைகளில் இருந்து விற்பனை செய்யப்படும் இடங்களுக்கு உரம் கொண்டு போக, தூரத்தை கணக்கிடாமல் குறிப்பிட்ட தொகை மட்டும் போக்குவரத்து மானியமாக வழங்கப்படுகிறது.
உர ஆலைகள் போக்குவரத்துக்கு ஆகும் உண்மையான கட்டணத்தை வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரி வருகின்றன.