Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல்லுக்கு ஆதார விலை ரூ.850 ஆக அதிகரிப்பு! மத்திய அரசு அறிவிப்பு!

நெல்லுக்கு ஆதார விலை ரூ.850 ஆக அதிகரிப்பு! மத்திய அரசு அறிவிப்பு!
, வியாழன், 12 ஜூன் 2008 (16:16 IST)
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.105 மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இதன்படி பொதுவான ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.850 ஆக வழங்கப்படும்.

ஏ.ரகம் எனப்படும் சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.875 ஆக வழங்கப்படும்.

இன்று கூடிய மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு, நெல் கொள்முதல் விலையை உயர்த்துவதாக அறிவித்தது.

விவசாய விளை பொருட்களுக்கான விலை நிர்ணய குழு, பொதுவான ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,000மும், சன்னரக நெல்லுக்கு ரூ.1,050மும் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், நெல்லுக்கு விலையை உயர்த்துவது தொடர்பாக பல மாநில அரசுகள் தெரிவித்த கருத்துக்கள், விவசாய விளை பொருட்களுக்கான விலை நிர்ணய குழுவின் பரிந்துரையை பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு பரிசீலித்தது.

இதன் பரிந்துரைத்தபடி, நெல் கொள்முதலுக்கான ஆதார விலையை அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு ஏற்றுக் கொண்டது. சில மாநில அரசுகள் விவசாய விளை பொருட்களுக்கான விலை நிர்ணய குழுவின் பரிந்துரையை விட குறைவாகவும், சில மாநில அரசுகள் அதிகமாக வழங்க வேண்டும என்று கேட்டிருந்ததாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சென்ற கரீப் பருவத்தில் பொதுவான ரகத்திற்கு குவிண்டாலுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.645ம், சன்னரக நெல்லுக்கு ரூ.675ம் வழங்கப்பட்டது. இத்துடன் ரூ.100 போனஸாக வழங்கப்பட்டது.

குஜராத், மத்தியப் பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்கள் குறைந்தபட்ச விலையை குவிண்டாலுக்கு ரூ.850 ஆகவும், ஹிமாசல பிரதேச அரசு ரூ.645 ஆக வழங்க வேண்டும் என்று கூறி இருந்தன.

அதே நேரத்தில் ஆந்திரா மாநில அரசு ரூ.1,300 ஆக வழங்க வேண்டும் என்று கூறி இருந்தது.

மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் குறிப்பிட்ட விலையை தெரிவிக்கவில்லை. ஆனால் இவை விவசாய விளை பொருட்களுக்கான விலை நிர்ணய குழுவின் பரிந்துரையை விட அதிக விலை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறி இருந்தன.

1999-2000ஆம் ஆண்டில் நெல்லுக்கு குறைந்தபட்ச விலை ரூ.60 மட்டுமே உயர்த்தப்பட்டது. 2003-04 முதல் 2007-08 ஆகிய நான்கு நிதி ஆண்டுகளில் ரூ.195 உயர்த்தப்பட்டுள்ளதாக சிதம்பரம் தெரிவித்தார்.

சென்ற வருடம் கோதுமையின் குறைந்த பட்ச கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.1000 என மத்திய அரசு நிர்ணயித்தது. இதே போல் நெல்லுக்கும வழங்க வேண்டும் என்று விவாசய சங்கங்கள் கேட்டு வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil