Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி 100 கோடி டாலராக அதிகரிப்பு!

நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி 100 கோடி டாலராக அதிகரிப்பு!
, வெள்ளி, 23 மே 2008 (18:57 IST)
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மிளகு, சீரகம், ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி 100 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிக அளவு நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதன் ஏற்றுமதி வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது.

நறுமணப் பொருட்கள் வாரியத்தின் தலைவர் வி.ஜே.குரியன் நேற்று கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்ற நிதி ஆண்டில் (2007-08) இந்தியாவில் இருநது நறுமணப் பொருட்கள் மற்றும் இதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் 4,44,250 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 4,435.50 கோடி.(1,018.0 மில்லியன் டாலர்).

சென்ற நிதி ஆண்டில் 3,73,750 டன் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூபாயில் 3,575.75 கோடி. (792.95 மில்லியன் டாலர்).

இந்த நிதி ஆண்டில் ரூ.3,600 கோடிக்கு 3.8 லட்சம் டன் ஏற்றுமதி செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை விட 117 விழுக்காடு கூடுதலாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிளகு ஏற்றுமதியில் இந்தியா எப்போதும் முன்னணியில் உள்ளது. இந்த நிதி ஆண்டிலும் அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ரூ.519.50 கோடி மதிப்பிற்கு 35 ஆயிரம் டன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய வருடத்தைவிட அளவு ரீதியில் 22 விழுக்காடும், மதிப்பு ரீதியாக 70 விழுக்காடு உயர்வாகும்.

உலக அளவில் விற்பனைக்கு வரும் மிளகு குறைவாக இருந்தது. அத்துடன் அதிக அளவு மிளகு உற்பத்தி செய்யும் வியட்நாம் போன்ற நாடுகள் குறைந்த அளவு விற்பனை செய்யததால், இந்தியாவில் இருந்து மிளகு ஏற்றுமதி அதிகரித்தது.

இதே போல் மிளகாய் ஏற்றுமதி, இதற்கு முன் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 9 ஆயிரம் டன் மிளகாய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1,097.50 கோடி. முந்தைய வருடத்தின் அளவுடன் ஒப்பிடுகையில் 47 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதே மாதிரியாக மதிப்பு ரீதியில் 25 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மசாலா பவுடர் 11,500 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய வருடத்தைவிட 21 விழுக்காடு அதிகம்.

இதே போல் நறுமண பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், பசை ஆகியவைகளின் ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது.

உலக சந்தையில் சென்ற வருடம் வென்னிலாவின் விலை சரிந்தது. இதற்கு காரணம் மடாகஸ்கர், உகாண்டா, பப்புவா நியு கினியா ஆக்ய நாடுகளில் இருந்து அதிக அளவு வென்னிலா விற்பனைக்கு வந்ததால், இதன் விலை குறைந்தன. சென்ற வருடம் 200 டன் வென்னிலா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. (முந்தைய வருடம் 125 டன்). ஏலக்காய் 500 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில் ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், பூண்டு, ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இஞ்சியின் விலை, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிக அளவு உள்ளது. இதனால் இஞ்சி ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.

ஆனால் கொத்தமல்லி, சீரகம், வெந்தயம் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்று குரியன் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil