டிராக்டர் மற்றும் விவசாய இயந்திரங்களுக்கு கடன் கொடுப்பதை நிறுத்தியிருப்பதாக, பாரத ஸ்டேட் வங்கி கூறியிருப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டிராக்டர், விவசாய கருவிகளை வாங்குவதற்கு வழங்கிய கடன், அதிக அளவு திருப்பி செலுத்தாமல் இருப்பதால், புதிதாக டிராக்டர் உட்பட விவசாய கருவிகளை வாங்க கடன் கொடுக்க வேண்டாம் என்று பாரத ஸ்டேட் வங்கி சென்ற வாரம், அதன் கிளை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.
இந்த வங்கி டிராக்டர் வாங்க ரூ.7,000 கோடி அளவுக்கு கொடுத்துள்ளது. இதில் 15 விழுக்காடு திருப்பி செலுத்தாமல், நிலுவையில் உள்ள கடனாக இருக்கின்றது என்று வங்கியின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலுவையை வசூல் செய்ய, டிராக்டர் உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து, வங்கி சிறப்பு நடவடிக்கை எடுக்க உள்ளதாக வங்கியின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிராக்டர் கடன் வழங்குவதை நிறுத்தியுள்ளது பற்றி, துணை மேலாண்மை இயக்குநர் (விவசாய மற்றும் கிராமப்புற வர்த்தக பிரிவு) அனுப் பானர்ஜி கூறுகையில், எங்களுடைய நோக்கம் டிராக்டர் வாங்க கடன் கொடுப்பதை நிறுத்துவது அல்ல. ஆனால் சில பகுதிகளில் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர். இதை சரிப்படுத்த விரும்புகின்றோம் என்று தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, ரூ.60 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதில் டிராக்டர் உட்பட விவசாய கருவிகள் வாங்க கடனும் அடங்கும். இதன்படி விவசாயிகள் டிராக்டர் வாங்க வாங்கிய கடனில், 25 விழுக்காடு மத்திய அரசு வழங்கும். மீதம் 75 விழுக்காடு கடன் வாங்கிய விவசாயிகள் கொடுக்க வேண்டும்.
மத்திய அரசின் கடன் தள்ளுபடி சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கே பொருந்தும். ஆனால் டிராக்டர் கடன் வாங்கியவர்கள் இந்த பிரிவு விவசாயிகள் அல்ல. இவர்கள் அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பை சாதகமாக எடுத்துக் கொண்டு தள்ளுபடி சலுகையை பயன் படுத்த விரும்புகின்றனர். ஆனால் இவர்களுக்கு கடன் தள்ளுபடி பொருந்துமா என்பது உறுதியாக தெரியவில்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாரத ஸ்டேட் வங்கி டிராக்டர் கடன் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி அனுப்பிய சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பா.ஜ செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது. இநத சுற்றிக்கையில் இருந்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மத்திய பட்ஜெட்டில் அறிவித்த 60 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதில் அக்கறையாக இல்லை என்று தெரிகிறது.
பாரத ஸ்டேட் வங்கி டிராக்டர் வாங்க புதிதாக கடன் வழங்க வேண்டாம் என்று ஒரு புறம் சுற்றறிக்கை அனுப்புகிறது. அதே நேரத்தில் அதன் அதிகாரிகளை டிராக்டர் விநியோகஸ்தர்கள் மூலம், டிராக்டர் கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகளை தொடர்பு கொண்டு, கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் பயன் அடையும் படி கூறுவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
மத்திய ஆட்சியில் உள்ளவர்களின் அனுமதி இல்லாமல், இந்த மாதிரியான சுற்றறிக்கையை வங்கி அனுப்பி இருக்காது. புதிய கடன் கொடுப்பது நிறுத்துவதால். விவசாய வேலைகள் தடைபடும் என்று கூறினார்.
பாரத ஸ்டேட் வங்கியை தொடர்ந்து மற்ற வங்கிகளும் டிராக்டர் உட்பட விவசாய கருவிகளை வாங்க கடன் கொடுபபதை நிறுத்தும் என்று தெரிகிறது.
இந்தியாவில் இந்த வங்கிதான் அதிக அளவு டிராக்டர் வாங்க கடன் வழங்கி வருகிறது. இப்போது கடன் வழங்குவதை நிறுத்துவதால், டிராக்டர் விற்பனையில் 75 விழுக்காடு வரை பாதிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் டிராக்டர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வருவாயும் பாதிக்கப்படும்.
இதன் தாக்கம் நேற்றை பங்குச் சந்தையில் எதிரொலித்தது. இந்தியாவில் அதிக அளவு டிராக்டர் விற்பனை செய்யும் மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் பங்கு விலை 1.44%, மற்ற டிராக்டர் உற்பத்தி நிறுவனங்களான எஸ்கார்ட் பங்கு விலை 0.7%, பஜ்சாப் டிராக்டர் பங்கு விலை 1.29% குறைந்தது.