''உரங்களை யாராவது பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்'' என்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் ரசாயன உரம் தட்டுப்பாடு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் செங்கோட்டையன், பா.ம.க. உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம், ம.தி.மு.க. உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், தமிழகத்தில் 55 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் நெல், சிறு தானியங்கள் மற்றும் பயிர் வகைகள் பயிரிடப்படுகின்றன. இதற்கு ஆண்டு தோறும் 17 லட்சம் டன் யூரியா, டி.ஏ.பி. பொட்டாசு போன்ற உரங்கள் தேவைப்படுகின்றன. 2007-08ஆம் ஆண்டு இந்த உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் வினியோகிக்கப்பட்டது. சமீபத்தில் டி.ஏ.பி. உரத் துக்கு மட்டும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.
இது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இந்த வகை உரத்துக்கு தட்டுப்பாடு நிலவியது. இந்த உரத்தை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் பாஸ்பரிக் அமிலம் அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதன் விலை அதிகரித்து விட்டதால் பல ஆலைகள் இந்த உரத்தின் உற்பத்தியை குறைத்து விட்டது.
ஸ்பிக் நிறுவனம் தற்போது இதன் உற்பத்தியை நிறுத்தி விட்டன. இந்த ஆண்டும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வழங்குவதற்கு தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளன. மேலும் தேவையான உரங்களை பெற்று தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உரங்களை பதுக்கி வைப்பதால் தட்டுபாடு ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து கடுமையான சோதனைகள் நடத்தப்படுகிறது. சமீபத்தில் ஒரு நிறுவனம் பதுக்கி வைத்திருந்த உரங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. உரங்களை யாராவது பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமும் எச்சரிக்கை விடுத்தார்.