புதிதாக மூன்று உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்று திருச்சி சந்தை குழு தலைவர் என். ஜோதி கண்ணன் தெரிவித்தார்.
திருச்சி சந்தை குழுவின் பொன் விழா நேற்று திருச்சியில் நடைபெற்றது. இதில் ஜோதி கண்ணன் பேசும் போது, தமிழ்நாடு விவசாய விளைபொருட்கள் விற்பனை துறையும், திருச்சி சந்தை குழுவும் இணைந்து புதிதாக மூன்று உழவர் சந்தைகளை அமைக்க முடிவு எடுத்துள்ளன. இவை திருச்சி மாவட்டத்தில் முசிரியிலும், கரூர் மாவட்டத்தில் பள்ளப்பட்டியிலும், அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்திலும் அமைக்கப்படும்.
இத்துடன் ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய நகரங்களிலும் புதிய உழவர் சந்தை அமைக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 18 இடங்களில் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன. இதில் வருடத்திற்கு ரூ.45 கோடி மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெறுகின்றது. இவை மூலமாக ரூ.2 கோடி வருவாய் கிடைக்கின்றது என்று தெரிவித்தார்.
இதன் செயலாளர் எம்.சாராதா பேசும் போது, திருச்சி மாவட்டத்தில் காட்டுப்புத்தூர் அருகே குளிர்சாதன வசதியுடன் கூடிய வாழைப்பழ சந்தை அமைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.