Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வானிலை மாற்றத்திற்கு தக்கவாறு பயிரிடல் அவசியம்: சுவாமிநாதன் வலியுறுத்தல்!

வானிலை மாற்றத்திற்கு தக்கவாறு பயிரிடல் அவசியம்: சுவாமிநாதன் வலியுறுத்தல்!
, திங்கள், 21 ஏப்ரல் 2008 (19:30 IST)
புவி வெப்பமடைதலால் ஏற்பட்டு வரும் வானிலை மற்றும் பருவ மாற்றத்திற்குத் தக்கவாறு பயிர் சாகுபடி முறைகளையும் மாற்றிக்கொள்ளும் ஆளுமையை விவசாயிகள் பெற வழிவகுக்க வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கூறினார்.

சென்னை தரமணியிலுள்ள தனது ஆராய்ச்சி மையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விஞ்ஞானி சுவாமிநாதன், வானிலை மாற்றம் தொடர்பான அறிதலை பஞ்சாயத்து அளவில் கற்பித்து, அந்த மாற்றத்திற்குத் தக்கவாறு பயிர் சாகுபடி செய்யும் திறனை விவசாயிகள் பெறுவது ஒன்றே, புவி வெப்பமடைதலால் ஏற்பட்டுள்ள சவாலை சந்திக்க ஒரே வழி என்று கூறினார்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை சராசரி அளவிற்குப் பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டி, “இதனை மிகச் சரியாக பயன்படுத்தி அதிகபட்ச உற்பத்தியை பெருக்க வேண்டும்” என்று கூறிய சுவாமிநாதன், எதிர்பார்த்த அளவிலான உற்பத்திக்கும், கிடைத்த உற்பத்திக்கும் இடையிலான வித்தியாசத்தை குறைக்கும் ஆளுமையை உருவாக்க வேண்டியது அவசியம் என்றார்.

தற்பொழுது ஏற்பட்டுவரும் வானிலை மாற்றங்களால் உணவு உற்பத்திக்கும், பாதுகாப்பிற்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை ஒரு சவாலாக ஏற்று உணவு உற்பத்தியை - சுற்றுச் சூழலையும் காத்து - தக்கவைக்கும் சிறப்புத் திட்டத்தை தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறிய சுவாமிநாதன், 1960களில் ஏற்பட்ட உணவு‌ப் பஞ்சம் மற்றும் பற்றாக்குறையை சமாளிக்க மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக உருவான பசுமைப் புரட்சித் திட்டம் நமது நாட்டிற்கு உணவுத் தன்னிறைவை அளித்ததைச் சுட்டிக்காட்டினார்.

“இன்று உருவாகியுள்ள இந்த அச்சுறுத்தலை ஒரு சவாலாக ஏற்று நிரந்தர பசுமைப் புரட்சித் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் உணவு உற்பத்திப் பெருக்கத்தை தொடர்ச்சியாக உறுதி செய்யவேண்டும” என்றார்.

“நமது நாட்டின் மக்கள் தொகை 2020ஆம் ஆண்டில் 130 கோடியாக உயரும் என்ற நிலையில், நமது நாட்டிலுள்ள கால்நடைகளின் எண்ணிக்கையும் 20 விழுக்காடு அதிகரிக்கவுள்ளதால், அவைகளுக்கான தீவன உற்பத்தி பெருக்க வேண்டிய நெருக்கடியும் உள்ளது” என்ற சுவாமிநாதன், அரிசி, கோதுமை உற்பத்திக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள இச்சூழலில், கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்கி உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றார்.

வானிலை அச்சுறுத்தல் ஆளுமை சட்ட வரைவு உருவாக்கம்!

வானிலை மாற்றத்தால் வேளாண் உள்ளிட்ட கிராமப்புற உற்பத்திக்கும், வாழ்விற்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள, கிராமப்புற மக்களை வானிலை மாற்றம் குறித்த அறிதலைப் பெற உறுதி செய்யும் வரைவுச் சட்டத்தை ஒவ்வொரு மாநில அரசும் நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சுவாமிநாதன், இப்படிப்பட்ட ஒரு சட்டத்தின் வரைவை உருவாக்க ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட வரைவு உருவானதும் அதனை அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.

இச்சட்ட வரைவின் முக்கிய அம்சங்களாக:

1. விதை வங்கி - எப்பொழுதெல்லாம் விதைப் பற்றாக்குறை ஏற்படுகிறதோ, அப்பொழுது விவசாயிகளுக்கு கொடுத்து உதவவும், மாற்றுப் பயிர் செய்யும் அவசியம் நேரிடும்போது அளிக்கவும் இது உதவும்.

2. உணவு வங்கி - உள்ளூர் அளவில் உணவு வங்கி உருவாக்கப்பட்டு, போதுமான அளவிற்கு உணவு தானியங்களை சேமித்து வைத்து, பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் மக்களுக்கு அளித்து பசியைப் போக்கிடல் - பிறகு அவர்கள் விளைவிக்கும்போது வட்டியுடன் சேர்த்துப் பெறுவது. இதனால் உணவு வழங்கல் உறுதியாவதுடன், விதைகளை உணவுத் தேவைக்காக பயன்படுத்திடும் நிலை தவிர்க்கப்படும்.

3. நீர் வங்கி - ஒட்டுமொத்த கிராம சமூகமும் ஒன்றிணைந்து திட்டம் வகுத்து தண்ணீரைச் சேமித்தல், சரியான முறையில் பயன்படுத்தல், சமமான நீர் பகிர்வை உறுதிசெய்தல் ஆகியன.

4. தீவன வங்கி - கால்நடைகளுக்கான தீவனம் தடையின்றி கிட்ட இதன் மூலம் வழிகாண்பது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தீவனங்கள் கெடாமல் பாதுகாத்தல்.

5. சூரிய சக்தி, காற்றாலை, பயோ-காஸ் என்றழைக்கப்படும் உயிரி எரிசக்தி போன்றவற்றின் மூலம் எரிசக்தித் தேவையை நிறைவு செய்தல்.

6. வானிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து உள்ள மலேரியா, டெங்கு, என்ஸிஃபாலிட்டீஸ் போன்ற நோய்கள் ஏற்படா வண்ணம் பாதுகாக்க கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்துதல்.

7. வானிலை மாற்றத்தைப் பற்றிய முழு அறிதலை கிராம மக்கள் பெற வகை செய்யும் கல்வி, பயிற்சி, கொள்கை வகுத்தல் ஆகியவற்றை உறுதிசெய்தல்.

ஆகிவற்றை அடிப்படையாக்க் கொண்டதாக இச்சட்ட வரைவு இருக்கும் என்றார் சுவாமிநாதன்.

Share this Story:

Follow Webdunia tamil