தனியார் வட்டிக் கடைக்காரர்களிடம் இருந்து விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி .செய்வதற்கு மத்திய அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை என்று மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் மக்களவையில் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குருதாஸ் தாஸ் குப்தாவின் துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் சரத்பவார், விவசாயிகள் தனியார்களிடம் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் பொறுப்பை மத்திய அரசு ஏற்க முடியாது. ஏனெனில் சிர மாநிலங்கள் வட்டிக்கடைக்காரர்கள் பற்றிய ஆவணங்களை பாரமரிப்பதில்லை என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், மத்திய அரசின் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பால் 3 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளும், 1 கோடி இதர விவசாயிகளும் பயன் அடைவார்கள் என்று தெரிவித்தார்.
தனியார்களிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த விவசாய கடன் தள்ளுபடியில், தனியார்களிடம் இருந்து வாங்கிய கடனையும் சேர்த்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கோரிவருகின்றன.