Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உருளைக்கிழங்கு விவசாயிகளையும் துரத்தும் தற்கொலை!

உருளைக்கிழங்கு விவசாயிகளையும் துரத்தும் தற்கொலை!
, சனி, 5 ஏப்ரல் 2008 (14:04 IST)
மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு உருளைக் கிழங்கு விளைச்சல் அளவுக்கதிகமாக இருந்தபோதும் தங்களது இடுபொருள் செலவைக்கூட மீட்க முடியவில்லை என்று விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அடுத்த முறை பயிர் செய்வதற்கும் கையில் பணம் இல்லாத நிலையிலுள்ளதாக மேற்கு வங்க உருளைக் கிழங்கு பயிர் செய்யும் விவசாயிகள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு அதிக விளைச்சலில் கிடைத்த பணம் வங்கி உள்ளிட்ட பிற கடன்களை அடைக்கவே போதுமானதாக இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தின் புர்த்வான் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது.

ஒரு சிறுபகுதி நிலத்தை பயிர் செய்வதற்கு ஆகும் செலவு ரூ.14,000, ஆனால் விளைச்சலை விற்று வரும் வருவாயோ வெறும் ரூ.7,000 மட்டுமே... அத்தனை கடின உழைப்பும் வீண் என்கிறார் கோபால் நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.

இதனால் அரசின் உதவியை இவர்கள் எதிர்பார்த்தபடி உள்ளனர். ஒட்டுமொத்த விளைச்சலையும் விற்க முடியவில்லை எனில் இழப்பு கடுமையாக இருக்கும் என்று கூறும் விவசாயிகள், இதற்காக அரசு ஏதாவது செய்தாகவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அரசு இது குறித்து மௌனம் கடைபிடித்து வருவதைக் கண்டித்துள்ளனர்.

விளைச்சல் முழுதையும் விற்க முடியாமல் போனால் ஏற்படும் இழப்பு விவசாயிகளின் தற்கொலைக்கு இட்டுச் செல்லும் என்று கோபால் நகரைச் சேர்ந்த விவசாயிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இந்த முறை ஹூக்ளி மாவட்டத்தில் மட்டும் சுமார் 90,000 ஹெக்டேருக்கு உருளைக் கிழங்குகள் பயிர் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 22 லட்சம் மெட்ரிக் டன்கள் விளைச்சல் கிடைத்துள்ளது. இது வரை அதிகபட்சமாக ஏற்பட்ட விளைச்சலான 28 லட்சம் மெட்ரிக் டன்களுக்கு இந்த முறை 6 டன்கள்தான் குறைவு என்கிறார் வேளாண் நிபுணர் அலிக் குமார் மோன்டால்.

ஹூக்ளியில் விளைந்த 22 லட்சம் மெட்ரிக் டன்கள் உருளைக் கிழங்கை வாங்க ஆளில்லை. இது தவிர மேற்கு வங்கத்தின் தெற்கு, வடக்கு பரகனாஸ், தீனஜ்பூர், புர்த்வான், கூச்பேஹார், ஜல்பைகுரி ஆகிய மாவட்டங்களிலும் உருளைக் கிழங்கு இந்த முறை அளவுக்கதிகமாக விளைச்சல் கண்டுள்ளது.

இவ்வளவு விளைச்சல்களும் வாங்க ஆளில்லாமல் தேங்கிக் கிடைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உருளைக் கிழங்கு விவசாயி ஒருவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிந்தவுடன் அரசு விவசாயிகளிடமிருந்து கிலோவிற்கு ரூ.2.50 விலை கொடுத்து உருளைக் கிழங்குகளை வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆனால் இதனாலும் கடன் சுமையிலிருந்து விவசாயிகள் விடுபடுவது கடினமே என்று வேளாண் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil