உளுந்தம் பருப்பு விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் பெய்த எதிர்பாராத மழையால் தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் பயிர் செய்திருந்த உளுந்து பயிர்கள் அழிந்து போய்விட்டன.
பொதுவாக உளுந்து போன்ற பருப்பு ரகங்களின் விலை ஏப்ரல் மாதங்களில் அதிகரிக்காது. ஏனெனில் அறுவடை செய்த புது சரக்கு சந்தைக்கு வரும். அதற்கு அடுத்த மே மாதத்திலும் அதிக அளவு உயராது. ஜூன் மாதம் முதல் விலை உயரும்.
ஆனால் தற்போது அறுவடை காலத்திலேயே விலை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கணிசமான அளவு ஏக்கரில் உளுந்து பயரிடப்படுகிறது. இங்கு பிப்ரவரி மாத இறுதியிலும், மார்ச் மாத முதல் வாரத்திலும் மழை பெய்தது. இந்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. அத்துடன் சோயாவுக்கு கூடுதல் விலை கிடைப்பதால், முன்பு உளுந்து பயிரிட்ட விவசாயிகள் சோயாவுக்கு மாறிவிட்டனர்.
இது போன்ற காரணங்களினால் உளுந்து உற்பத்தி எதிர்பார்த்த அளவை விட குறைந்து விட்டது. இந்த வருடம் ஆந்திராவில் உளுந்து 2 லட்சத்து 50 ஆயிரம் டன் உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் மழையால் இதன் உற்பத்தி 1 லட்சத்து 80 ஆயிரம் டன்னாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல் தமிழ்நாட்டில் 75 ஆயிரம் டன் உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டது. இந்த மழையால் 40 ஆயிரம் டன் உற்பத்தியானலே அதிசயம் என்று கருதப்படுகிறது.
வட இந்திய் மாநில வியாபாரிகள் தற்போது உளுந்து கொள்முதல் செய்யவில்லை. அங்கு இருப்பு இருப்பதால் கொள்முதல் செய்யாமல் இருக்கின்றனர். ஆனால் ஏப்ரல் முன்றாவது வாரத்திற்கு பிறகு கொள்முதல் செய்ய ஆரம்பிப்பார்கள். அப்போது உளுந்து விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அத்துடன் வட மாநிலங்களில் உற்பத்தியாகும் உளுந்து, அந்த மாநிலங்களிலுக்கு பற்றாக்குறையாக இருக்கும.
இந்தியாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளிலும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பருப்பு வகைகளை அதிக அளவு ஏற்றுமதி செயயும் மியான்மிரிலும் உளுந்து உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த வருடம் மியான்மரில் உளுந்து அதிக அளவு விளைச்சல் இருந்தது. மியான்மரிலும் இந்த வருடம் பாதித்துள்ளது.
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மினரல் மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷன் சென்ற வாரம் உளுந்து உட்பட பல்வேறு பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய விலைப்புள்ளி கோரியது.
இது போன்றே ஸ்டேட் டிரேடிக் கார்ப்பரேஷன், நஃபீட் ஆகிய மத்திய அரசு நிறுவனங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பருப்பு வகைகளை இறக்குமதி செய்து வருகின்றன.
இதனால் தான் வெளி சந்தையில் அதிக அளவு விலை உயராமல் உள்ளது.
தற்போது உயர்ரக உளுந்து விலை 100 கிலோவுக்கு ரூ.2,850 முதல் ரூ.2,900 வரையிலும், இரண்டாவது ரக உளுந்து விலை ரூ.2,400 முதல் 2,450 வரை உள்ளது.
தற்போது தமிழ்நாடு, ஆந்திராவில் உளுந்து உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதால், இதன் விலை உயரும் என வியாபாரிகள் கருதுகின்றனர்.