மழை பொய்த்து போனாதால் நஷ்ட ஈடு வழங்குமாறு தொடுத்த வழக்கில், காப்பீடு நிறுவனத்திற்கு மதுரை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கின் விபரம் வருமாறு.
அக்ரிகல்சர் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் என்ற காப்பீடு நிறுவனம் 2006-07 ஆம் ஆண்டில் மழை பொய்த்து போய், விவசாயம் பாதிக்கப்பட்டால் நஷ்ட ஈடு வழங்கும் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அப்போது இளையாங்குடி தாலுகாவில் உள்ள தாயனூர் என்ற ஊரைச் சேர்ந்த விவசாயி எஸ்.சுப்பிரமணியன், இந்த காப்பீடு திட்டத்தில் சேர்ந்தார். இந்த காப்பீடு திட்டத்தின் படி, மழை பொய்த்து போனால் மாதத்திற்கு ரூ.6,000 நஷ்டஈடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான 2007- 08 ஆண்டு பிரிமியமாக ரூ.1,334 செலுத்தினார். அந்த வருடம் மழை பெய்யாமல், பொய்த்து போய் விட்டது.
இவருக்கு காப்பீடு நிறுவனம் நஷ்ட ஈடாக ரூ.1,131 மட்டும் வழங்கியது. இந்த காப்பீடு நிறுவனம் முதலில் மழையின் அளவு குறைபாடு 12.5 மி.மீ என்று தெரிவித்தது. இரண்டாவது கட்டமாக மழையின் அளவு 19.8 மி.மீ குறைவு என தெரிவித்தது. காப்பீடு நிறுவனம் சராசரி மழையை விட குறைவாக பெய்துள்ள மழை அளவை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு நஷ்டஈடு வழங்கி உள்ளது.
ஆனால் தான் பயிர் செய்ய ரூ.6 ஆயிரத்து 600 வரை செலவு செய்துள்ளதாகவும், தனக்கு ஏக்கருக்கு நஷ்டஈடாக ரூ. 6,600 வழங்க வேண்டு்ம் என்று தானும், மற்ற சில விவசாயிகளும் காப்பீடு நிறுவனத்திற்கு கடிதம் எழுதியும், காப்பீடூ நிறுவனம் எவ்வித பதிலையும் அனுப்பவில்லை.
எனவே மழை பொய்த்து ஏற்பட்ட நஷ்டம் முழுவதையும்,காப்பீடு நிறுவனம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி தனபால், அக்ரிகல்சர் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட், ஹோசூரைச் சேர்ந்த சரார் பார்ம் அகாடமி, சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.