மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போல விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வரும் நிதியாண்டில் விவசாயிகள் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன் பெறும் ஒரு இலட்சம் விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட பத்தாயிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும் என்றும் இக்குழுக்கள் கூட்டுப் பொறுப்புடைய அமைப்புகளாக செயல்பட்டு கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத் துறை வங்கிகளிடமிருந்து எளிதில் கடன் பெற இயலும் என்றும் அரசு கூறியுள்ளது.
"இந்தக் குழுக்களுக்குச் சுழல் நிதியாக அரசின் சார்பில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம், இந்த குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள், தங்களின் அவசரத் தேவைகளுக்கான கடனையும் குழுவிடமிருந்தே பெறலாம்.
இதுமட்டுமன்றி, உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து வேளாண் இடுபொருட்களைக் குறைந்த விலையில் வாங்கவும், விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்கவும் வாய்ப்பு உருவாகும்" என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.