ஒட்டுமொத்த கோதுமை வயலையும் அழித்துவிடக் கூடிய வல்லமை படைத்த புதிய வகை விஷப் பூஞ்சை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளைத் தாக்கும் அபாயம் உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.
ஆசிய ஆஃப்ரிக்கக் கண்டங்களில் விளையும் கோதுமை வகைகளில் 80 விழுக்காட்டை தாக்கி அழிக்கும் புதிய விஷப் பூஞ்சை ஈரானில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் பூஞ்சையின் விதைகள் கோதுமையின் மகரந்தத்துடன் இணைந்து கண்டம் கடந்து பரவி வருகின்றன. முதலில் கிழக்கு ஆஃப்ரிக்கா, யேமன் நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட இப்பூஞ்சை தற்போது ஈரானிற்கு பரவியுள்ளது.
ஈரானின் மேற்குப் பகுதியில் உள்ள பிரெளஜெர்ட், ஹமேதான் நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வகச் சோதனைகளில் இது உறுதி செய்யப்பட்டதாக ஐ.நா.வின் உணவு, வேளாண் கழக அறிக்கை தெரிவித்துள்ளது.
கோதுமை உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஆஃப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இப்பூஞ்சை பரவும் அபாயம் அதிகம் உள்ளதாகவும் ஐ.நா. எச்சரித்துள்ளது.
ஏற்கெனவே விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நாடுகள் தங்கள் கோதுமை உற்பத்தி பாதிக்கப்படாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. வேளாண் பாதுகாப்புப் பிரிவு அதிகாரி சிவாஜி பாந்தே கூறினார்.