மத்திய அரசின் நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் வேளாண் நிலங்களின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளதாகப் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"கடந்த 1991-92 ஆம் நிதியாண்டில் ஒட்டு மொத்த நீர்ப்பாசன வசதியுள்ள இடத்தின் பரப்பளவு 8 கோடியே 11 லட்சம் ஹெக்டேராக இருந்தது. மத்திய அரசு இதனை அதிகரிக்க மேற்கொண்ட பெரிய, நடுத்தர, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் 2006-07 ஆம் நிதியாண்டில் மொத்த நீர்ப்பாசன வசதி கொண்ட வேளாண் நிலங்களின் பரப்பு 10 கோடியே 28 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
கிராமப்புற மேம்பாட்டிற்கான பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் கிராமப்புற உள்கட்டமைப்பில் உள்ள 6 முக்கிய காரணிகளில் நீர்ப்பாசனத் திட்டமும் ஒன்றாகும். கடந்த 2005-06, 2006-07 நிதியாண்டுகளில் முறையே 16 லட்சத்து 80 ஆயிரம் ஹெக்டேர், 19 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி உருவாக்கப்பட்டு உள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.