தமிழ்நாட்டில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் அதிக நெல் உற்பத்தி செய்து முதலிடத்தை பெற்றுள்ளதாக ஈரோட்டில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் முருகப்பன் கூறினார்.
ஈரோட்டில் மாவட்ட சிவில் இன்ஜினியர்கள் சங்கம் சார்பில் நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கு நடந்தது. நீர் மேலாண்மை குறித்து அண்ணாமலை பல்கலைக்கழக சிவில் இன்ஜினிரியரிங் துறை பேராசிரியர் முருகப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியது, தமிழகம் உள்பட நாட்டில் தற்போது காலநிலை மாற்றத்தால் போதிய மழையின்றி கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு வனநிலை, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றங்களும் ஒரு காரணமாக உள்ளன. தவறான நீர் மேலாண்மையினாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் தேங்கும் இடத்தில் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பதன் மூலம் மழை நீரை தேக்க முடியாமல் போய்விடுகிறது. இதன் விளைவு நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைகிறது. மழைக்காலங்களில் ஒரு பகுதி நீரை சேமிப்பதுடன், அதிகமாக வரும் நீர் கடலுக்கு ஆறுகளின் வழியாக செல்ல வேண்டும். 600 ஆண்டுகளுக்கு முன் கடல் சீற்றத்தால் சுனாமி வந்தது.
கடந்த காலத்தில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு நடந்தே செல்லும் நிலை இருந்தது. தற்போது படகில் செல்கிறோம். சீதோஷ்ண நிலை மாற்றத்துக்கு நாம் தான் காரணம். பெட்ரோல் மற்றும் டீஸலுக்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டும். பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் சேர்க்க வேண்டும். பழை நீர்நிலைகளில் ஆக்ரமிப்புகளை அகற்றுவதுடன் புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும். இதுபோன்று அமைத்தால், உடனடியாக பலன் கிடைக்காது. பத்து முதல் 20 ஆண்டுகளில் பலன் கிடைக்கும். வயல்களில் சுற்றும் சிட்டுக்குருவியை தற்போது பார்க்க முடிவதில்லை.
நீர் ஆதாரத்துக்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர் சிக்கனம் கடைபிடிக்கப்படுகிறது. அடுத்து மதுரை மாவட்டத்தில் நீர் சிக்கனம் கடைபிடிக்கப்படுகிறது. 1986ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை கடுமையான வறட்சி காலம். அதிலும், 1986ல் மிக மோசமான வறட்சி ஏற்பட்டது. தமிழகத்தில் நெல் உற்பத்தியில் தஞ்சை தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால் 1986ம் ஆண்டு நெல் உற்பத்தியில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தை பிடித்தது. இதுக்கு காரணம் நீர் மேலாண்மைதான். தஞ்சை விவசாயிகள் ஓடும் நீரை உபயோகித்து சாகுபடி செய்கின்றனர். ஆனால், ராமநாதபுரத்தில் கண்மாய் பாசனத்தில் தான் நெல் சாகுபடி பணிகள் நடக்கிறது.
கண்மாய்கள் மூலம் நிலத்தடிநீர் உயர்வதுடன், கண்மாய் நீரை அப்பகுதி மக்கள் குடிநீராகவும் பயன்படுத்துகின்றனர். ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் அதிகளவு குடிநீர் குளங்கள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 60 ஆயிரம் குளங்கள், கண்மாய் போன்ற நீர் நிலைகள் இருந்தன. ஆனல் தற்போது, 20 ஆயிரம் கண்மாய், குளங்கள் கூட இல்லைல. தற்போது நீர்நிலைகள் உள்ள இடங்களில் கட்டிடங்கள் உருவாகியுள்ளன. மேடான பகுதியில் உள்ள தஞ்சை விவசாயிகள், மோட்டார்கள் வைத்து பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர். ஆனால் மதுரை, ராமநாதபுர மாவட்டங்களில் மோட்டார் வைத்து தண்ணீர் இறைக்க கூட வசதியில்லை. மாடுகளை பூட்டி தான் தண்ணீர் இறைக்கின்றனர்.
இதனால் தண்ணீர் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது. தண்ணீர் சேமிப்பது குறித்து ராமநாதபுரம், சென்னை மக்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். சென்னையில் 30 லிட்டர் தண்ணீரில் குடும்பத்தையே நடத்திவிடுவர். தண்ணீரை வீணாக்க கூடாது. கழிவுநீரை ஆறுகளில் விடுகிறோம். இதையும் கணக்கிட வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் கழிவு நீர் சுத்திகரித்து குடிப்பதை தவிர பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயோ டீஸல் தயாரிக்க காட்டாமணக்கு பயிரிட்டால், உணவு தட்டுப்பாடு வரலாம்.
கரும்பில் இருந்து நேரடியாக எத்தனால் எடுக்கலாம். நேரடியாக எத்தனால் எடுக்க சில நிறுவனங்களுக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. நேரடியாக எடுத்தால் சர்க்கரை உற்பத்தியும் குறைய வாய்ப்புள்ளது. தற்போது சர்க்கரை ஏற்றுமதி செய்யும் நிலையில் நாடு உள்ளது. நஞ்சை நிலத்தை மாற்றக்கூடாது. புஞ்சை நிலத்தை மாற்றலாம். தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
களத்தில் அறுவடை செய்யப்பட்ட பொருளுக்கும் சாப்பிடும் பொருளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. ஒரு டன் விளைபொருள் உற்பத்தியில், 33 சதவீதம் வீணாகிறது. இதற்கு தண்ணீரை வீணடித்துள்ளோம். காலமாற்றத்துக்கு நாம்தான் காரணம். மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் மூன்றும் முக்கியமானது. தரமான தண்ணீர் வழங்க சிவில் பொறியாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும். மழைநீரை முழுவதும் தேக்க கூடாது. சிறிது திறந்து விட்டு அவை கடலில் கலக்க வேண்டும். வீடுகள் கட்டும்போது, காலியிடம் அதிகம் விட வேண்டும். அமெரிக்காவில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீரை சேமிப்பது இல்லை. கழிவுநீரை சுத்திகரிக்கும் பிளான்ட்கள் உள்ளன. அவற்றையே அவர்கள் மறு உபயோகத்துக்கு பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.