Publish Date: Thu, 07 Feb 2008 (10:38 IST)
Updated Date: Thu, 07 Feb 2008 (10:38 IST)
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள நான்கு நீர்ப்பாசனம், வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு தேசிய வேளாண், கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு) ரூ.48 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்நிதியைக் கொண்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ள ஜி ஏ கால்வாயின் ஒரு பகுதி சீரமைப்பு, ஈரோடு மாவட்டம் கலிங்கராயன் கால்வாய் சீரமைப்பு, மதுரை மாவட்டத்தில் சாத்தையூர் ஓடை மற்றும் செல்லூர் கண்மாயில் வெள்ளத் தடுப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
புது டெல்லியில் கடந்த மாதம் 31ஆம் தேதி நடைபெற்ற ஊரக கட்டுமான வளர்ச்சி நிதியின் 95-வது திட்ட அனுமதி குழு கூட்டத்தில் இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்துடன் தமிழகத்திற்கு நடப்பு நிதியாண்டில் ரூ.770.28 கோடி மதிப்புடைய திட்டங்களுக்கு நபார்டு வங்கி அனுமதி வழங்கியுள்ளது என்று அவ்வங்கியின் முதன்மை தலைமை மேலாளர் ராகவலு தெரிவித்தார்.