காவிரியில் கர்நாடகம் தடுப்பணைக் கட்டுவதை தடை செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுத் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் கர்நாடகம் அதன் நீரோட்டத்தை தடுக்கும் வகையில், கடந்த வருடம் பிப்ரவரி 5 ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தடுப்பணைகள் அல்லது புதிய நீர்தேக்கத் திட்டங்கள் கட்ட அனுமதிக்க கூடாது என்று கூறி தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வீ. இரவிந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கர்நாடகம் சட்டத்துக்கு புறம்பாக தடுப்பணைகள் கட்டி காவிரியின் நீரோட்டத்தை தடுக்க முயலுவதாக தெரிவித்தார்.
இந்த வாதத்தைத் தொடர்ந்து நீதிபதிகள் 2 வார காலத்திற்குள் தனது பதிலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு , அம்மாநில அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.