அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 2100 ஹெக்டேர் பரப்பில் பழத்தோட்டங்களை அமைக்க ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 2100 ஹெக்டேர் பரப்பில் பழத்தோட்டங்களை தேசிய தோட்டக் கலைத்துறை மூலம் மேற்கொள்ள ரூ.1.98 கோடி நிதி ஒதுக்க அனுமதி வழங்கியுள்ளது.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத் துறை நடைமுறைகளை சீர்படுத்தினால்தான் இந்த திட்டத்தை செம்மையாக நடைமுறைப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக தோட்டக் கலைத்துறை அலுவலகங்களை மாவட்ட அளவிலும், மண்டலங்கள் அளவிலும் உருவாக்கி தோட்டக் கலைத்துறையை நிலைப்படுத்தப்படும்.
தற்போது தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தும் முன் பெரம்பலூர் தோட்டக் கலைத்துறைக்கு உதவி ஆணையரை மாவட்ட அளவில் நியமனம் செய்து அரியலூரில் அவருடைய அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மண்டல அளவில் தோட்டக் கலைத்துறை உதவி ஆணையருக்கு கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 10 மண்டலங்களில், ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு தோட்டக் கலைத்துறை அலுவலர் மற்றும் 4 உதவி தோட்டக் கலைத்துறை அலுவலர்களை நியமித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பெரம்பலூர் மாவட்ட தோட்டக் கலைத்துறைக்கு துணை இயக்குநர் பதவிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்டத்துக்கும் இதேப்போன்ற ஒருவரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.