வேளாண் துறைக்கு அதிக கடன் வழங்க ஏற்ற வகையில் கூடுதல் நிதி விரைவில் ஒதுக்கப்பட உள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர், பாரத ரிசர்வ் வங்கி ஆளுனர், நபார்டு வங்கித் தலைவர் ஆகியோரைத் தொடர்ந்து சந்தித்து தமது தலைமையிலான குழு வலியறுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த விவாதங்களின் மூலம் விவசாயிகளுக்கு உதவ கணிசமான நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்ற புரிதல் சம்மந்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு வாரங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் குழு நெறிமுறைகள் தொடர்பாக இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் சரத் பவார்,அரசு வேளாண் கடனை முதல் மூன்று ஆண்டுகளில் ரூ.80,000 கோடியிலிருந்து ஒரு லட்சத்து 60,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்ததாக குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு வேளாண் கடன் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடியை எட்டியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கடன் தேவைப்படும் விவசாயிகளுக்கு இன்னும் நம்மால் கடன் வழங்க இயலாத நிலையில், கடன் பெற முடியாத விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலை ஒரு வேளாண் அமைச்சராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும், இது தமக்கு வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு நிதி நிறுவனங்கள் விவசாய கடன் வழங்கி வரும் நிலையிலும், கணிசமான விவசாயத் துறை சார்ந்த பலர் இன்னும் இந்த பயனை பெற இயலாத நிலையிலேயே நீடித்து வருவதாகவும் பவார் தெரிவித்துள்ளார். இந்திய விவசாயிகள் எதிர்கொண்டு வரும் மிகப் பெரிய சுமை குறித்து தீவிரமாக யோசிக்கக் கூடிய ஒரு காலச்சூழல் தற்போது வந்துள்ளதாகவும், மிகப் பெரிய அளவில் விவசாயிகள் நிதி நிறுவனங்கள் வழங்கும் வேளாண் கடன்களைப் பெற்று பயனடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் கடன் கிடைக்காத சூழ்நிலையில் விவசாயிகள், தங்கள் தொழிலைத் தொடங்க முதல் போட முடியாத நிலையில் உள்ளனர். இதனால் வேளாண் உற்பத்தி, திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை எதிர்கொள்ள அரசு பல்வேறு வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானதாகவும் பவார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிலை சீரடைவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் அப்போது உறுதியளித்துள்ளார்.