சர்வதேச சந்தையில் நறுமணப் பொருட்கள் வர்த்தகத்தில் சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளின் போட்டியை சமாளித்து வெற்றி பெறுவோம் என்று வி.ஜே குரியன் நம்பிக்கை தெரிவித்தார்.
நறுமண வாரிய தலைவர் வி.ஜே..குரியன் நேற்று கொச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சர்வதேச சந்தையில் மிளகு, ஏலக்காய், மிளகாய், இலவங்கம் போன்ற நறுமணப் பொருட்கள் வர்த்தகத்தில் இந்தியாவுக்கு போட்டியாக சீனா, வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளுடனான போட்டியை முறியடித்து ஏற்றுமதி அதிகரிக்கப்படும்.
சென்ற நிதி ஆண்டில் 79 கோடியே 20 லட்சம் டாலர் மதிப்புள்ள நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது இந்த நிதி ஆண்டில் 100 கோடி டாலரை எட்டிவிடும். நமக்கு மிளகு ஏற்றுமதியில் வியட்நாம் கடுமையான போட்டியாளராக உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் மிளகு பதப்படுத்தும் அமைப்பு, வியட்நாமை விட சிறப்பாக இருக்கிறது.
இத்துடன் அமைக்கப்பட உள்ள நறுமணப் பொருட்கள் தொழில் பூங்காவில், மிளகு உட்பட நறுமணப் பொருட்களை பதப்படுத்தும் அமைப்பை பலப்படுத்த உள்ளோம். இதனால் வியட்நாமின் சவாலை எதிர் கொள்ள முடியும்.
மிளகாய், இஞ்சி ஏற்றுமதியில் நமக்கு சீனா சவாலாக இருப்பது உண்மைதான். அதே நேரத்தில் இந்திய பொருட்கள் தரமாக இருப்பதால், சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. நறுமணப் பொருட்களின் சர்வதேச அளவிலான மொத்த வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு அளவில் கணக்கிட்டால் 44 விழுக்காடாகவும், ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் 36 விழுக்காடாகவும் உள்ளது. இங்கிருந்து மிளகாய், இஞ்சி, மிளகு, கொத்தமல்லி, ஏலக்காய், சீரகம் ஆகியவை அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று குரியன் கூறினார்.