கொப்பரை தேங்காய்க்கு குறைந்த பட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது.
மலேசியா, இந்தோனேஷியாவில் இருந்து அதிகளவு பாமாயில் இறக்குமதி செய்யப்படுகின்றது. இதனால் சமையலுக்கு பாரம்பரியமாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி வந்தவர்கள் விலை மலிவான பாமாயிலை பயன் படுத்துகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது குறைந்தது. அத்துடன் தென்னை மரத்தில் சிலந்தி பூச்சி தாக்குதலால் தென்னை விவசாயிகள் கடும் பாதிப்பிற்கும், நஷ்டத்திற்கும் உள்ளாயினர்.
தென்னை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் கொப்பரை தேங்காய் விலையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். இது தொடர்பாக மக்களவையிலும், மக்களவை உறுப்பினர்கள், குறிப்பாக கேரளா மாநில மக்களவை உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.
சென்ற வியாழக்கிழமை நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரை குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் கொப்பரை தேங்காயின் குறைந்த பட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.40 அதிகரிப்பதாக முடிவு செய்யப்பட்டது.
இது பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறும் போது, எண்ணெய் எடுக்கும் கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.3,660 ஆகவும், உடைக்காத கொப்பரையின் விலை குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரத்து 910 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு தென்னை விவசாயிகள் தென்னை வளர்ப்புக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். அத்துடன் தேங்காய் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பாக அமையும் என்று கூறினார்.
விவசாய விளை பொருட்கள் விலை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், மத்திய அரசு கொப்பரை விலை உயர்வு முடிவை எடுத்துள்ளது.