தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இதுவரை 7,300 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரடியாக ஆய்வு செய்தார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 16.50 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த நெல் கொள்முதல் சரியான முறையில் நடக்கிறதா என்று சோதனை செய்யவும், விவசாயிகளின் குறைகளை நேரில் கேட்டறியவும் அரசு முடிவு செய்தது.
இதன்படி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அவருடன் அதிகாரிகளும் சென்றனர்.
அப்போது, "டெல்டா மாவட்டங்களில் மட்டும் 508 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதலான கொள்முதல் நிலையங்களை திறக்கவும் அரசு தயாராக உள்ளது.
புதன்கிழமை வரை டெல்டா மாவட்டங்களில் 7,300 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது." என்று அமைச்சர் வேலு தெரிவித்தார்.
இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் சூரக்கோட்டை, மடிகை, ஒரத்தநாடு, வடுவூர் ஆகிய பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்த அமைச்சர், அங்கு விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.