விவசாயிகள் பயிர் செய்வதை நிறுத்துவது பற்றி ஆலோசனை செய்து வருகின்றனர்.
விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கு சரியான தீர்வு கிடைக்காததால் புதிய முறையில் எதிர்ப்பை தெரிவிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளனர்.
ஹைதராபாத்தில் இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் விவசாயம் செய்வதற்கு விடுமுறை விடுவது பற்றி ஆலோசனை முன் வைக்கப்பட்டது.
இந்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.செங்கள் ரெட்டி பேசுகையில், விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண பயிர் செய்யும் மொத்த பரப்பளவில் 10 விழுக்காடு அளவிற்கு பயிர் செய்யாமல் இருப்பது. இதன் மூலம் விளை பொருட்களின் தேவையை அதிகரிக்க செய்வது என்று கூறினார்.
பாரத் விவசாயிகள் சங்கத் தலைவர் அஜ்மிர் சிங் லோங்வால் பேசுகையில், விளைபொருட்களுக்கு மத்திய அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை, மொத்த விலை குறீயீட்டு எண்ணுடன் இணைக்க வேண்டும், விவசாய உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணயிப்பு வாரியம் நெல், கோதுமை உட்பட எல்லா தானியங்களும் உற்பத்தி செய்ய ஆகும் செலவை கணக்கிட்டு கூறுகிறது. இது அறிவிக்கும் செலவைவிட உண்மையாக ஆகும் செலவு மிக அதிகமாக இருக்கின்றது.
விவசாய பயிர்களுக்கும், விவசாயிகளுக்கும் நாடு முழுவதும் ஒரே சீரான காப்பீடு முறையை பி்ன்பற்ற வேண்டும். அத்துடன் விவசாயத்திற்கு கொடுக்கப்படும் மாணியம் விவசாயிகளிடம் நேரடியாக கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
அஜ்மிர் சிங் லோங்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், 10 விழுக்காடு பரப்பளவில் பயிர் செய்யாமல் இருப்பது எங்களின் எதிர்ப்பை காண்பிப்பதற்கான அடையாள பூர்வமான போராட்டமே. இதை மற்ற விவசாய சங்கங்களும் ஏற்றுக் கொண்ட பிறகு அமல் படுத்தப்படும் என்று தெரிவித்தார்.