விவசாய விளை பொருட்களின் விலையை நிர்ணயிக்க சரியான விபரங்கள் இல்லாததால் நியாயமான விலையை நிர்ணயிக்க முடியவில்லை என்று டாக்டர் டி. ஹெய்க் தெரிவித்தார்.
விவசாய விளை பொருட்களுக்கு உற்பத்தி ஆகும் செலவு, இதற்கு அரசு நிர்ணயிக்க வேண்டிய குறைந்த பட்ச விலை (ஆதார விலை) போன்றவற்றை விவசாய உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணயிப்பு வாரியம் செய்கிறது. இது விளை பொருட்களுக்கு ஆகும் உற்பத்தி செலவை கணக்கிட்டு, அதற்கு தகுந்தாற்போல் விளைபொருட்களுக்கு என்ன விலை நிர்ணயிக்கலாம் என அரசுக்கு பரிந்துரை செய்கிறது. இதன் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு நெல், கரும்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கு ஆதார விலையை அறிவிக்கிறது.
ஹைதரபாத்தில் நேற்று இந்திய விவசாயிகள் சங்கங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் விவசாய உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணயிப்பு வாரியத்தின் தலைவர் டாக்டர் டி.ஹெய்க் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
எங்கள் வாரியத்தால் விவசாய விளை பொருட்களுக்கு சரியான முறையில் விலை நிர்ணயிக்க முடியவில்லை. எங்களுக்கு தவறு இல்லாத புள்ளி விபரங்கள் கிடைப்பதில்லை. இதனால் தான் சரியான விலை நிர்ணயிக்க இயலவில்லை.
விவசாய விளை பொருட்களின் விலையை கணக்கிடும் முறையில் தவறு உள்ளது. எங்களுக்கு தரப்படும் விபரம் உண்மையாக ஆகும் செலவாக இல்லை.
நாங்கள் புள்ளி விபரங்களுக்கு பொருளாதார மற்றும் புள்ளி விபர இயக்குநரகத்தையே எதிர்பார்த்து கொண்டு இருக்க வேண்டியதுள்ளது. எங்கள் வாரியம் நேரடியாக விவசாயத்திற்கு உண்மையாக ஆகும் செலவு பற்றிய விபரங்களை திரட்ட அனுமதிக்கப்பட வேண்டும்.
உதாரணமாக பஞ்சாப் மாநிலத்தில் நில குத்தகை மற்றும் விவசாய தொழிலாளர்களுக்க வழங்கப்படும் உண்மையான கூலிக்கும், இது பற்றி எங்களிடம் கொடுக்கப்பட்ட விபரம் உண்மைக்கு எதிரானதாக இருந்தது. இதை மத்திய விவசாய அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஆதார விலையால், விவசாயிகளின் பிரச்சனை தீர்ந்து விடாது. அவர்களின் பிரச்சனை தற்போது வழங்குவதை விட இரண்டு மடங்கு விலை கொடுத்தாலும் தீராது. விவசாயிகள் பயன் அடையும் வகையில் சரியான வர்த்தக கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.