நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. ஆயிரம் கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இம்மாதம் 20ம் தேதி ஈரோட்டில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நெல் உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் முன்னிலை வகித்து வருகிறது. மாவட்டத்தில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் கால்வாய்கள், பவானி ஆறு, அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகளில் ஆண்டுதோறும் மூன்று லட்சம் ஏக்கர் வரை நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யப்படட நெல்லுக்கு தற்போது அரசு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 650 மட்டுமே வழங்குகிறது.
நெல்லுக்கு போதிய விலையின்றி ஆண்டு தோறும் நஷ்டம் ஏற்படுவதால் விவசாயிகள் நெற்பயிரை தவிர்த்து மாற்றுப்பயிர் சாகுபடியில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மாற்றுப்பயிராக எந்த பராமரிப்பு, உற்பத்தி செலவும் இல்லாமல் அதிக லாபம் கிடைக்கக்கூடிய, மக்காச்சோளம், சூரியகாந்தி போன்ற பயிர்களை அதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். வழக்கத்தை விட மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் வரை மற்றுப்பயிர் பயிரிடப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் விலையை உயர்த்த விவசாயிகள் வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அதே நிலையில், வட மாநிலங்களில் எந்த செலவும் இல்லாமல் மானாவாரியில் கோதுமை சாகுபடி செய்த விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் மூலம் கோதுமைக்கு மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ. ஆயிரம் வழங்குவதாக கூறியுள்ளது.
இதேபோல் மத்திய, மாநில அரசுகள் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. ஆயிரம் நிர்ணயம் செய்யக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஈரோட்டில் வரும் 20ம் தேதி தலைமை தபால் நிலையம்முன் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சங்க மாவட்ட செயலாளர் சுப்பு கூறியதாவது: மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் ஏக்கர் வரை விவசாயிகள் மாற்று பயிருக்கு மாறியுள்ளனர். இதே நிலை நீடித்தால், நெல் உற்பத்தி வெகுவாக குறைந்து, வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். வட மாநிலங்களில் எந்த செலவும் இல்லாமல் மானாவாரி நிலத்தில் விவசாயிகள் கோதுமை பயிரிடுகின்றனர்.
மத்திய அரசு ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ. ஆயிரம் விலை நிர்ணயித்து அறிவித்துள்ளது. ஆனால் நஞ்சை பயிராக பயிரிடும் நெல்லுக்கு அரசு ரூ. 650 தான் கொள்முதல் விலை நிர்ணயிக்கிறது. வட மாநில விவசாயிகளுக்கு சலுகை வழங்கும் மத்திய அரசு, தென் மாநில விவசாயிகளுக்கு நியாயமான விலை கூட நிர்ணயம் செய்யாமல், புறக்கணித்து வருகிறது.
ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. ஆயிரம் வழங்க கோரி, ஈரோடு தலைமை தபால்நிலையம் முன் வரும் 20ம் தேதி மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று அவர் கூறினார்.