விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மாநிலங்களவையில் கட்சி வேறுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தெலுங்கு தேச உறுப்பினர் ரவுலா சந்திர சேகர ரெட்டி கோதுமைக்கு வழங்குவது போல் நெல்லுக்கும் குவின்டாலுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ.1,000 வழங்க வேண்டும் வேண்டும். ஆந்திராவில் நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டமடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகளை துயரத்தில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு தாமதிக்காமல் நெல்லுக்ககான ஆதரவு விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா பேசுகையில், நாடு முழுவதும் உள்ள நெல் விவசாயிகள் படும் துயரங்களை விளக்கினார். தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் நெல்லுக்கான ஆதார விலையை அதிகரிக்க கோரி நவம்பர் 27 ந் தேதி போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு தாமதிக்காமல் நெல் விலையை குவின்டாலுக்கு ரூ.1,000 என அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.