நபார்டு என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய விவசாய, கிராமப்புற வளர்ச்சி வங்கி கேரள மாநிலத்திற்கு இயற்கை வேளாண்மைக்கான மானியமாக ரூ.5 கோடியே 41 லட்சம் வழங்கியுள்ளது.
இது பற்றி நபார்டு வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் பல்வேறு மானிய திட்டங்களின் கீழ் ரூ.5 கோடியே 26 லட்சமும், தேசிய இயற்கை வேளாண்மை திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்து 24 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.
இது கிராமப்புறங்களில் கிடங்கு கட்டுதல், குளிர்சாதன கிடங்கு கட்டுதல், விவசாய விளை பொருட்களை சந்தை படுத்துவதற்கான உள்கட்டமைப்பு ஏற்படுத்துதல், அறுவடைக்கு பின் தானியங்களை பாதுகாத்தல், விற்பனை செய்யும் வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவைகளுக்காக மானியம் வழங்கப்பட்டுள்ளது. இது 15 விழுக்காடு முதல் 33.3 விழுக்காடு வரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் நோக்கம் விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையே உள்ள இடைத்தரகர்களை குறைத்தல், ரகத்தை பிரிக்கும் வசதியை ஏற்படுத்துதல், தரப்படுத்தல், தரச் சான்று வழங்குதல், விவசாயிகள் உற்பத்தி பொருட்களை கிடங்கில் பாதுகாப்பாக வைத்து, அதன் உரிமை சீட்டை காண்பித்து விற்பனை செய்யும் வசதியை அறிமுகப்படுத்துதல் ஆகியவையாகும்.
இந்த நிதியாண்டில் கிராமப்புறங்களில் நான்கு கிட்டங்கி கட்டவும், 19 விவசாய விளைபொருள் விற்பனை மையங்களை கட்டவும் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் காயங்குளம் மீன்பிடி துறைமுகம் கட்ட மாநில அரசுக்கு ரூ.19 கோடியே 9 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.