ஊட்ட சத்துள்ள உரத்திற்கு மட்டுமே மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய இரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
புது டெல்லியில் நடைபெற்று வரும் பொருளாதார பத்திரிக்கை ஆசிரியர்கள் மாநாட்டில் ராம் விலாஸ் பாஸ்வான் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
“மத்திய அரசு ஊட்டச்சத்து உள்ள உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கே மானியம் வழங்க திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் தரம் குறைந்த உரம் தயாரிக்கும் நிறுவனங்களை ஒதுக்குவதுடன், உரத்திற்கு வழங்கும் மானிய செலவும் குறையும். .
அத்துடன் தரமான ஊட்டச்சத்து மிகுந்த உரம் பயன் படுத்துவதால் மண்ணின் வளமும் பாதுகாக்கப்படும் வாய்ப்பு ஏற்படும். விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் ஊட்ட சத்து உள்ள உரத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த மாற்றத்தினால் குறுகிய காலத்திற்கு உரத்திற்கு வழங்கப்படும் மானியம் ரூ.1,200 கோடி அதிகரிக்கும். அதே நேரத்தில் விவசாயிகள் தற்போது பயன்படுத்தும் உரத்திற்கு பதிலாக புதிய வகை உரத்தை பயன்படுத்துவதால் நீண்ட கால நோக்கில் உரத்திற்கு வழங்கப்படும் மானியச் செலவு குறையும். தற்போது யூரியா, டி.ஏ.பி, எம்.ஒ.பி, எஸ்.எஸ்.பி வகை உரங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் உரம் உற்பத்திக்கான செலவு அதிகரித்து வருகிறது. இவற்றால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும்,, உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும், உரத்திற்கான மானியம் ஒதுக்கீடு செய்வதை அரசு அதிகரித்துள்ளது. கடந்த சில வருடங்களாக அரசுக்கு உரத்திற்கு வழங்கப்படும் மானிய செலவு அதிகரித்துள்ளது.
மத்திய அரசு உரத்திற்கு மானியமாக 2005-06 ஆம் நிதி ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 841 கோடி வழங்கியது. இது அடுத்த ஆண்டு (2006-07) ரூ.28,826 கோடியாக அதிகரித்தது.
இந்த நிதி ஆண்டில் (2007- 08) ரூ.39 ஆயிரத்து 191 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உர மாணியச் செலவு அதிகரிக்க முக்கிய காரணம், சர்வதேச சந்தையில் இதன் தயாரிப்புக்கான இடு பொருட்கள், உரத்தின் விலை அதிகரித்து இருப்பதே.
உள்நாட்டில் உர உற்பத்தி அதிகரிக்கவும், முக்கியமான உரங்கள் தட்டுப்பாடில்லாமல் தாராளமாக கிடைக்கத் தேவையான முயற்சிகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் யூரியா 203.08 டன், டி.ஏ.பி ரக உரம் 48.51 டன் உற்பத்தி செய்யப்படுள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டில் உர உற்பத்தி அதிகரிப்பதுடன், இதன் உபயோகமும் பெருமளவு அதிகரித்து வருகிறது” என்று ராம் விலாஸ் பஸ்வான் கூறினார்.