Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல் கொள்முதல் விலையுயர்த்த ரயில் மறியல் : விவசாயிகள் முடிவு!

நெல் கொள்முதல் விலையுயர்த்த ரயில் மறியல் : விவசாயிகள் முடிவு!

Webdunia

, புதன், 14 நவம்பர் 2007 (13:32 IST)
நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.1,000 ஆக உயர்த்த கோரி ரயில் மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் 9 ந் தேதி கோதுமை, நெல் கொள்முதலுக்கான விலையை அறிவித்தது.

இதன்படி சன்னரக நெல் குவின்டாலுக்கு ரூ.675, இரண்டாம் ரக நெல் குவின்டால் ரூ.654 இத்துடன் ரூ.50 போனசாக அறிவித்தது.

அதே நேரத்தில் கோதுமை கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.1,000 என அறிவித்தது. கோதுமை சாகுபடிக்கு ஆகும் செலவை விட, நெல் சாகுபடிக்கான செலவு அதிகம் என்று கூறி விவசாயிகள் நெல் கொள்முதலுக்கான விலையை குவின்டாலுக்கு ரூ.1,000 என உயர்த்த வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் முத்த தலைவர் அத்வானி நெல் கொள்முதல் விலையை கோதுமைக்கு சமமாக அதிகரிக்க கோரி கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதலவர் கருணாநிதியும் நெல் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த எல்லா அரசியல் கட்சிகளும் நெல் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் நெல் கொள்முதல் விலையை கோதுமைக்கு சமமாக குவின்டாலுக்கு ரூ.1,000 என அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

திருச்சியில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

மத்திய அரசு நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரி காவேரி டெல்டா பகுதியை சேரந்த விவசாயிகள் திருச்சி உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் வருகின்ற 27 ந் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்கான தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கிய கரும்புக்கான நிலுவைத் தொகை ரூ.300 கோடியை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய நடவடிக்கை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil