Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈரோடு மாவட்டத்தில் கோமாரியில் 80 மாடு, 30 எருமை பலி

ஈரோடு மாவட்டத்தில் கோமாரியில் 80 மாடு, 30 எருமை பலி

Webdunia

, செவ்வாய், 13 நவம்பர் 2007 (18:17 IST)
ஈரோடு மாவட்டத்தில் பெரியபுலியூர் பஞ்சாயத்து பகுதியில் கோமாரி நோயால் இறந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி மனுநீதி முகாமில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கால்நடைகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பவானி ஊராட்சிக்குட்பட்ட பெரியபுலியூர் பஞ்சாயத்து பகுதியில் 20 நாட்களில் 200க்கும் மேற்பட்ட மாடு, எருமை, ஆடுகள் இறந்து விட்டன. இறந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மனு நீதி முகாமில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பது, பவானி ஊராட்சிக்குட்பட்ட பெரியபுலியூர் பஞ்சாயத்தில் 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் 20 நாட்களாக கால்கட்டு, வாய்சப்பை நோயால் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கோமாரி நோயால் இதுவரை 80 மாடுகள், 30 எருமை, 150 ஆடுகள், 50 கன்றுக்குட்டிகள் இறந்துவிட்டன. 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதில், 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் எலும்பு‌‌், தோலுமாக தீவனமின்றி இறக்கும் நிலையில் உள்ளன.கால்நடைத் துறை இயக்குனர், கலெக்டர் ஆகியோர் இப்பகுதியில் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, கோமாரி நோயால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க நான்கு மருத்துவக் குழுவினர் அமைக்கப்பட்டனர். அவர்கள் அளிக்கும் சிகிச்சை பலனில்லாமல் உள்ளது.கால்நடைகள் இறப்பால் ஏராளமான விவசாயிகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். பால் உற்பத்தி கடும் பாதிப்பு அடைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கால்நடைகள் இழந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மாடுக்கு தலா ரூ. 15 ஆயிரம், எருமைக்கு ரூ. 10 ஆயிரம், கன்றுக்குட்டிக்கு ரூ. 5 ஆயிரம். ஆடுக்கு தலா ரூ. 2 ஆயிரம் என நிவாரணம் வழங்க வேண்டும். நோய் பாதித்த கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். உரிய நிவாரணம் வழங்கவில்லை என்றால் வரும் 17ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil