நாட்டின் வனப்பகுதிகளையும், மரங்கள் அடங்கிய பகுதிகளின் பரப்பையும் அடுத்த 5 ஆண்டு திட்டக்காலத்தில் 5 விழுக்காடு அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த இலக்கை வரும் 11-வது திட்டக்காலத்தில் மேற்கொள்ளும் வகையில் டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் ஒப்புதல் பெறவும் திட்டமிட்டுள்ளது.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காடு வளர்ப்பு தொடர்பான சந்தேகங்கள் மத்திய அரசை இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த உந்தியுள்ளது. கணிசமான அளவுக்கு குறைந்துள்ள வனப்பகுதிகளை மீண்டும் வளர்த்தெடுக்க இத்திட்டம் உதவும்.
அண்மைக் காலமாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் வனப்பகுதிகள் மேம்பட்டு வருவதாக கூறப்படும் புள்ளிவிவரங்கள் தொடர்பாக சந்தேகம் எழுந்தது. செயற்கைக்கோள் அளவீடுகள் சரியானது தானா என்ற வினாவும் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வனவளம் குன்றிய பகுதிகளின் மேம்பாட்டிற்கான திட்டத்தைச் செயல்படுத்த பிரதமர் ரூ.5,000 கோடி ஒதுக்கியது தொடர்பான வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த புதிய திட்டத்தின் படி மேற்கொள்ளப்படும் பணிகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கூட்டு வன மேலாண்மை திட்டத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
புதிதாக வணிக பயிர்கள் எதுவும் பயிரிடப்படாது. கடந்த 30 ஆண்டுகளாக வளம் குறைந்த வனப்பகுதிகளில் வணிக பயிர்களை விளைவிக்க தனியாருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுப்பப்பட்டு வந்துள்ளது. இதன் மூலம் அழிக்கப்பட்ட வனப் பகுதிகளை குத்தகைக்கு விடும் மத்திய சுற்றுச் சூழல்-வனத்துறை அமைச்சகத்தின் திட்டம் காலாவதியாகிவிடும்.
இத்திட்டம் ஏற்கனவே கடந்த 30 ஆண்டு காலமாக பல்வேறு காலக் கட்டங்களில் பலமுறை ஆய்வுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அழிந்துவரும் வனப்பகுதிகளைத் தனியாருக்கு தொழில் தொடங்க என்பதன் அடிப்படையில் வழங்கக் கூடாது என கிராமவாசிகள், வனப்பகுதிகளில் வாழும் மக்கள், அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர். மக்களின் நிலங்களை இலவசமாக தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்றும் கூறி வந்தனர்.
வனம் சாராத தரிசு, பயனற்ற நிலையில் உள்ள நிலங்களை அப்பகுதி மக்களின் அனுமதியுடன் பெற்று தனியார் தொழில் தொடங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தையும் பயன்படுத்தி கிராமப்புற இந்தியாவை பசுமையாக்கவும் இத்திட்டத்தில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இதன்படி அழிந்த வனப் பகுதிகளை மீண்டும் பசுமையாக்க தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தனியாக திட்டங்களும், பணிகளும் வரையறுக்கப்பட்டு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உரிய காலத்தில் திட்டப் பணிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற உத்திரவாதத்தின் அடிப்படையில் 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு நிதியுதவியை மத்திய அரசு வழங்கும்.