உச்ச நீதிமன்ற தடையை மீறி மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரி, தக்காளி, வெண்டைக்காய், நெல், நிலக்கடலை ஆகியவற்றை பயிரிட்டு சோதனை செய்ய, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அனுமதிக்கும் குழு அனுமதித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சமூக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த அருணா ரோட்ரிகிஸ் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கின் விபரம் வருமாறு :
சமூக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த அருணா ரோட்ரிகிஸ், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அனுமதித்தால், நமது விவசாயிகள், உணவு வகைகள், அதை சாப்பிடும் மக்களின் உடல் நலன், வனப்பகுதி மற்றும் நமது கிராமப்புறங்கள் பாதிக்கப்படும். அத்துடன் அவர்கள் எதை பயிர் செய்வது என்று தேர்ந்தெடுக்கும் உரிமை பறிபோகும் என்று கூறி, இதன் சோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ந் தேதி புதிதாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை நிலத்தில் பயிர் செய்து சோதனை செய்ய்க் கூடாது என்று தடை விதித்தது. உச்ச நீதி மன்றத்தின் இந்த தடை உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில் இப்போது அருணா ரோட்ரிகிஸ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், உச்சநீதிமன்ற தடை உத்தரவுக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் 8 ந் தேதி நடைபெற்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அனுமதிக்கும் குழுவின் கூட்டத்தில், 8 பயிர் வகைகளின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயிர் செய்து சோதணை செய்ய அணுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், நிலக்கடலை ஆகியவைகளும் அடங்கும். இது உச்சநீதிமன்றத்தின் தடைக்கு எதிரான செயலாகும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், வி.எஸ். ஸ்ரீபுர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷன், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அனுமதிக்கும் குழு எவ்வாறு உச்சநீதி மன்ற உத்தரவை மீறியுள்ளனர் என்பதை விளக்கினார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்படவில்லை என்று பதிலளித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.