காவிரி டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்ததால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் நெற்பயிர்கள் அழுகும் நிலைஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் கடந்த 5 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
கன மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சிதம்பரத்தில் 25 செ. மீ. மழை!
கோவை மாவட்டம், உடுமலையில் உள்ள அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கோவை, ஈரோடு, கரூர் மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் வெள்ளம் ஏற்பட்டு சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் ஒன்றியங்களில் ஏறத்தாழ சுமார் 7 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. சிதம்பரம் அண்ணாமலைநகரில் நேற்று மிக அதிக அளவாக 24.7 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக 117.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.