Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல் கொள்முதல் விலை : ஆந்திரத்தில் ரயில் மறியல்!

நெல் கொள்முதல் விலை : ஆந்திரத்தில் ரயில் மறியல்!

Webdunia

, புதன், 24 அக்டோபர் 2007 (18:41 IST)
நெல்லுக்கு கொள்முதல் விலையாக குவின்டாலுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கோரி ஆந்திர மாநிலத்தில் எதிர் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்!

ஆந்திராவில் நெல்கொள் முதல் விலையை அதிகரிக்க கோரி இன்று எதிர்க்கட்சிகள் பல்வேறு நகர்களில் ரயில் மறியலில் ஈடுபட்டன.

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பா.ஜ.க. மற்றும் இடது சாரி கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் செகந்திராபாத்தில் இருந்து டில்லி செல்லும் ஆந்திரா விரைவு வண்டி ஒரு மணி நேரத்திற்கும் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. ரயில் மறியலில் ஈடுபட்ட தலைவர்களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

ரயில் மறியலின் போது பேசிய முன்னாள் அமைச்சரும், தெலுங்கு ராஷ்டிரிய சமிதி சட்டப் பேரவை உறுப்பினருமான ஹரிஸ் ராவ், இது தொடர்பாக மாநில அரசு அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுவை டில்லிக்கு அழைத்து சென்று மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஒய். நாகேஷ்வர ராவ் பேசும் போது,
மத்திய அரசு எல்லா விவசாய விளை பொருட்களுக்கும் கொள்முதல் விலையை உயர்த்தும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார்.

விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காத காரணத்தினால், விவசாயிகள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர மாநில பொதுச் செயலாளர் லட்சுமணன் கூறினார்.

வாரங்கல் மாவட்டத்தில் கஜிபேட்டை ரயில் நிலையத்தில் எதிர்க்கட்சியினர் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் ராஜதானி, சத்வாகனா விரைவு வண்டிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதே போல் ஆந்திர மாவட்டத்தில் பல பகுதிகளில் நடந்த ரயில் போராட்டத்தால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

மத்திய அரசு கொள்முதல் செய்யப்படும் கோதுமை விலையை குவின்டாலுக்கு ரூ. 1000 என அறிவித்துள்ளது. கோதுமைக்கு வழங்குவது போல் நெல்லுக்கும் வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக மக்களவை எதிர்க் கட்சித் தலைவரும் பாரதிய ஜனதா தலைவருமான அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதே போல் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதாவும் நெல்லுக்கு கொள்முதல் விலையை ரூ. 1000 ஆக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.



Share this Story:

Follow Webdunia tamil