விவசாய வேலைகளுக்காக நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருப்பதாக மாநில விவசாய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்!
தென்கிழக்காசிய நாடுகளில் விவசாய பணிகளை பார்வையிட அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையிலான பிரதிநிதிகள் குழு 14 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டது.
இதுபற்றி வீரபாண்டி ஆறுமுகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
ஜப்பானில் இருந்து நெல் விதைப்பு மற்றும் அறுவடை செய்யும் இயந்திரம் இறக்குமதி செய்யப்படும். சீனாவில் இருந்து கரும்பு வெட்டும் இயந்திரமும், கரும்பு சாறு பிழியும் இயந்திரமும் இறக்குமதி செய்யப்படும்.
தமிழகத்திற்கு இந்த மாத இறுதியில் இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் உயர்மட்ட பிரதிநிதி குழுவினர் வருவார்கள். இவர்கள் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
இந்த பிரதிநிதி குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு, இறக்குமதி செய்ய உள்ள இயந்திரங்களின் விலை நிர்ணயிக்கப்படும். அதற்கு பிறகு இயந்திரங்கள் வாங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்படும்.
இந்த இயந்திரங்கள் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்துடன் இணைந்து, தமிழ்நாடு விவசாய துறை சார்பில் வாங்கப்படும். இவை எல்லா மாவட்ட தலைநகரங்களுக்கும் அனுப்பப்படும்.
விவசாயிகள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி நாற்று நடவு, நெல் அறுவடைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல் கரும்பு விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது தாய்லாந்தில் உள்ள எஸ். என். கே. ஐ நிறுவனம், ஜப்பானில் டோக்கியோவில் உள்ள மிட்சுபிசி, ஒகாயா நகரத்தில் உள்ள யார்மார் நிறுவனம் சினாவில் உள்ள ஹான்சன் மிஷினரி ஆகிய விவசாய பணிக்கு தேவையான இயந்திரங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளே பார்வையிட்டதாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.