நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.50 போனஸ் அறிவித்த பிறகு கொள்முதல் அதிகரித்துள்ளதாக இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்த கரிப் பருவத்தில் பஞ்சாப், ஹரியானா உட்பட பல மாநிலங்களில் நெல் அறுவடை நடந்து வருகிறது. நெல் அறுவடையின் போது மத்திய அரசுக்காக இந்திய உணவு கழகம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது. இதே போல் மத்திய அரசின் சார்பில், மாநில உணவு கழகங்களும் கொள்முதல் செய்கின்றன.
இந்த கரிப் பருவத்தில் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையுடன் போனஸ் (ஊக்கத்தொகை ) அறிவிக்கப்படாத காரணத்தினால் கொள்முதல் எதிர்பார்த்த அளவு இல்லை என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் மத்திய அரசு நேற்று நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.50 போனசாக அறிவித்தது.
நெல்லுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நெல் மொத்த வி்ற்பனை மையங்களில் நெல் விற்பனைக்கு வருவது அதிகரித்துள்ளது.
முன்பு தினசரி சுமார் 3 லட்சம் டன் விற்பனைக்காக வந்தது. போனஸ் அறிவிக்கப்பட்ட பிறகு 5 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதனால் கொள்முதலும் அதிகரித்து இருப்பதாக இந்திய உணவு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அலோக் சிங் தெரிவித்தார்.
இவர் மேலும் கூறுகையில், நாங்கள் நேற்று வரை விற்பனைக்கு வந்த 46 லட்சம் டன் நெல்லில், 33 லட்சம் டன் கொள்முதல் செயதுள்ளோம் என்று தெரிவித்தார்.
தற்போது போனஸ் அறிவிக்கப்பட்டதால், இந்த பருவத்தில் கொள்முதல் இலக்கான 255 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்துவிட முடியும் என்று இந்திய உணவுக் கழகம் நம்பிக்கையுடன் உள்ளது.
இந்த வருடம் மத்திய அரசு கொள்முதல் செய்யும் அளவு 22 விழுக்காடு குறைந்துள்ளது. சென்ற கரிப் பருவத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 52 லட்சம் டன் நெல்லில், இந்திய உணவு கழகம் 42 டன் நெல் கொள்முதல் செய்தது.
தற்போது அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும் சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.675 ம், இதர ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.645 ம் வழங்கப்படுகிறது. இத்துடன் நேற்று மத்திய அரசு போனசாக குவிண்டாலுக்கு ரூ.50 அறிவித்துள்ளது.
மத்திய அரசு நேற்று கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவின்டாலுக்கு ரூ.250 அதிகரித்துள்ளது. முன்பு கோதுமைக்கு குவின்டாலுக்கு ரூ.750 வழங்கப்பட்டு வந்தது.
கோதுமை கொள்முதல் குறித்து அலோக் சின்கா கூறுகையில், கோதுமை குவின்டாலுக்கு ரூ.1,000 என்பது நல்ல விலைதான். நாங்கள் அதிகளவு கொள்முதல் செய்வோம். குறைந்தபட்ச ஆதார விலை என்பது விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்படுகிறது. கொள்முதலை அதிகரிக்க அல்ல. கோதுமைக்கு போனஸ் வழங்குவது பற்றி, மத்திய அரசு கொள்முதல் செய்வதற்கு முன்பு முடிவு செய்யும் என்று சின்கா தெரிவித்தார்.