தி.மு.க. தலைமையிலான ஆட்சியை பதவியில் இருந்து அகற்றும் வரை பா.ஜ.க தொடர்ந்து போராட்டம் நடத்தும்.
மேலும் இன்று அ.தி.மு.க. நடத்தும் போராட்டத்துக்கு பா.ஜ.க. முழு ஆதரவை தரும் என பா.ஜ. மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் தெரிவித்தார்.
சென்னையில் பா.ஜ.க அலுவலகம் தி.மு.க.வினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க வின் கொடிகம்பத்தை சேதப்படுத்தியதை கண்டித்தும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கலந்துகொண்டு பேசியதாவது, தமிழக முதல்வர் குறித்து தெரிவித்த கருத்துக்கு, பா.ஜ.க. முன்னாள் எம்.பி. வேதாந்தி மன்னிப்பு கேட்ட பிறகும், பா.ஜ.க. அலுவலகம் மீது தி.மு.க.வினர் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். பல்வேறு இடங்களில் கொடிகம்பங்களை சேதப்படுத்தியுள்ளனர்.
அத்வானியின் கொடும்பாவியை எரித்தும், வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ராமர் பாலத்தை இடிப்போம் என மத்திய அமைச்சர் பாலு கூறியிருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.
அதனால் தி.மு.க. அரசை அகற்றும் வரை பா.ஜ.,வின் போராட்டம் தொடரும்.
இன்று தமிழக அரசுக்கு எதிராக அ.தி.மு.க., நடத்தும் போராட்டத்துக்கு பா.ஜ., முழு ஆதரவை வழங்கும் என்று அவர் பேசினார்.