Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏலக்காய் இணைய ஏல முறையை வியாபாரிகள் புறக்கணிப்பு!

ஏலக்காய் இணைய ஏல முறையை வியாபாரிகள் புறக்கணிப்பு!

Webdunia

, செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (18:51 IST)
ஏலக்காயின் முக்கிய ஏல மையமான போடிநாயக்கனூரில் திங்கட்கிழமையன்று நடந்த இணைய ஏல முறையை வியாபாரிகள் புறக்கணித்தனர்!

ஏலக்காய் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர், கேரளாவில் உள்ள நெடும்காண்டம், குமுளி ஆகிய இடங்களில் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் போடிநாயக்கனூர் முக்கியமான, பெரிய அளவிலான ஏல மையமாகும். இங்கு இணைய முறையில் ஏலம் விடும் முறையை கடந்த மாதம் நறுமணப் பொருட்கள் வாரியம் அறிமுகப்படுத்தியது. இதற்கான மின்னணு முறையை டாடா கன்டல்டன்சி லிமிடெட் வடிவமைத்து கொடுத்தது. ஏல முறையை ஏலக்காய் உற்பத்தியாளர் சங்கமும், எஸ்.டி.சி.எல் லிமிடெட் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. இங்கு நாடு முழுவதிலும் இருந்து வியாபாரிகளும், ஏற்றுமதியாளர்களும் வந்து ஏலக்காயை கொள்முதல் செய்கின்றனர்.

ஏலத்தை புறக்கணிப்பது பற்றி வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது ; இணையம் மூலம் ஏலம் விடும் புதிய முறையை அறிந்து கொள்வதற்கு போதிய கால அவகாசம் கொடுக்காமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணைய முறையில் ஒவ்வொரு ஏலமும் முடிவடைவதற்கு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் ஆகின்றது. பழைய முறையில் 10 முதல் 20 நொடிகளே ஆகும்.

எங்களால் ஒரே நேரத்தில், அல்லது மிக குறுகிய காலத்தில் ஏலக்காயின் தரம், அதன் மதிப்பை நிர்ணயித்து விலையை குறிப்பிட முடியவில்லை. நாங்கள் இந்த புதிய முறையை கற்று, இயக்க பழகிக் கொள்ளும் வரை, நாங்கள் இணைய ஏலத்தில் பங்கேற்பது சிரமம்.

நாங்கள் இந்த வியாபாரத்தில் பல வருடங்களாக இருக்கின்றோம். நீண்ட காலமாகவே பழைய முறையிலேயே ஏலத்தில் வாங்கியுள்ளோம். இத்துடன் நாங்கள் வயதானவர்கள். இளம் தலைமுறையினரை போல குறுகிய புதிய முறையை வேகமாக அறிந்து, இயங்குவது சாத்தியமில்லாதது. எங்களுடைய நடைமுறைச் சிக்கல்களை அதிகாரிகள் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் புதிய இணைய ஏலமுறையை அறிந்து கொள்ள தேவையான கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது வரை ஏலத்தில் பங்கேற்பதில்லை என்று 50 வியாபாரிகள் பங்கேற்ற சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இணைய ஏலத்தை வியாபாரிகள் புறக்கணிக்க முடிவு செய்ததால், ஏற்கனவே ஏலத்திற்காக ஏலக்காய் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்து ஏலக்காய் ஏலம் விடுவது ரத்து செய்யப்பட்டது. எனவே ஏலக்காயை விற்க விவசாயிகள் நெடும்காண்டம் அல்லது குமுளி ஏல மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இது குறித்து நறுமணப் பொருட்கள் வாரியத்தின் வர்த்தக பிரிவு இயக்குநர் எஸ். கண்ணன் கூறுகையில், பழைய முறையை விட, இணைய ஏல முறை வியாபாரிகளுக்கு பல வழிகளில் பயன் உள்ளது. அவர்கள் இந்த புதிய முறையை பழகும் போது ஏலம் முடிவடைய எடுத்துக் கொள்ளும் நேரம் குறையும். இந்த பிரச்சனையை வியாபாரிகளுடன் பேசி தீர்வு காணப்படும்.
ஏலம் விடும் அமைப்புகள் டிசம்பர் 1 ந் தேதி முதல் புதிய இணைய ஏல முறையை கடைப்பிடிக்கமாறும், அதுவரை பழைய முறையை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil