Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க குழு : கமல்நாத்!

தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க குழு : கமல்நாத்!

Webdunia

, திங்கள், 17 செப்டம்பர் 2007 (19:34 IST)
தமிழகத்தில் நீலகிரி மாவட்ட சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் தேயிலைக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயிக்க முத்தரப்பு குழு அமைக்கப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

ஐக்கிய தோட்ட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தென் பிராந்திய 114 வது மாநாட்டை தொடங்கி வைத்த மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது :

தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க முத்தரப்பு குழு அமைக்கப்படும். இந்த குழுவில் தேயிலை வாரியம், அரசு அதிகாரிகள், சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள் இந்த முத்தரப்பு குழு அடுத்த இரண்டு வாரங்களில் அமைக்கப்படும். இது குறுகிய காலத்தில் தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை அறிவிக்கும்.

இந்த குழுவிற்கு குறைந்தபட்.ச விலையை அறிவிப்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க விரும்பவில்லை. இது சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் அறிவிக்கும் என்று கமல்நாத் கூறினார்

அவர் மேலும் கூறுகையில், சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக எவ்வித மானியமும் வழங்கப்படாது என்று கூறியதுடன், மானியம் வழங்குவது சரியான அணுகுமுறையாக இருக்காது என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலாக மத்திய அரசு சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் நலனுக்காக பல்வேறு ஒருங்கிணைந்த திட்டங்களையே செயல்படுத்த விரும்புகிறது.

13 வருடங்களுக்கு முன்பு ஐந்து சதவிதமாக இருந்த சிறு தேயிலை உற்பத்தியாளர்கள், தற்போது 22 சதவிதமாக அதிகரித்துள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என்பதை அரசு உணர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொள்கை அளவில் சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு விலை நிர்ணயிப்பை ஏற்றுக் கொள்கின்றது என்றும் கமல்நாத் கூறினார்.

மத்திய அரசு தேயிலையை அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வருமா என்று கேட்டதற்கு, தற்போது இதற்கு அவசியம் இல்லை என்று அரசு கருதுவதாகவும், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் கமல்நாத் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil