ஜாட்ரோஃபா எனும் கொட்டையைப் பயன்படுத்தி மூலிகை டீசலை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்!
ஜாட்ரோஃபா எனும் தாவரத்தின் வேர் பகுதியில் உள்ள கொட்டைகளை எடுத்து அதனை பிழிந்து எடுக்கப்படும் சாருடன் மெத்தனால் எனும் இரசாயனப் பொருளை ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் கலந்த பிறகு இரண்டு மணி நேரம் தொடர்ந்து கலக்கிய பிறகு அதில் உள்ள கிளைசரால் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் தங்கும் திரவப் பொருள் டீசலைப் போலவே மிகச் சிறந்த வாகன எரிபொருளாகிறது.
இந்த புதிய வாகன எரிபொருளை மூலிகை டீசல் என்று கூறிய முனைவர் பி.வி. வெங்கடாச்சலம், இதன் தயாரிப்புச் செலவு லிட்டருக்கு 16 ரூபாய் ஆகிறது என்றும், ஒரு நாளைக்கு 250 லிட்டர்கள் வரை தாங்கள் வடிவமைத்துள்ள உபகரணத்தின் வாயிலாக தயாரிக்க முடியும் என்று கூறினார்.
இதனுடைய துணைப் பொருளாக கிடைக்கும் எண்ணெய் பின்னாக்கு மிகச் சிறந்த உரம் என்றும், கிளைசரால் சோப்பு தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.
இந்த ஜாட்ரோஃபா தாவரம் அமெரிக்காவைச் சேர்ந்தது என்றும், இதனை போர்ச்சுகீசிய ஏற்றுமதியாளர்கள் உலகின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு சென்றனர் என்றும் முனைவர் வெங்கடாச்சலம் கூறினார்.
மலைப் பிரதேசங்களில் 1,400 மீட்டர்களுக்கும் உயரமான பகுதிகளில் மிகக் குறைந்த மழையளவு உள்ள காய்ந்த இடங்களில் இந்த தாவரம் மிக அதிகமாக வளரக்கூடியது என்று கூறிய வெங்கடாச்சலம், இத்தாவரத்தின் கொட்டையில் இருந்து 46 முதல் 58 விழுக்காடு வரை எண்ணெய் போன்ற திரவத்தை எடுக்கமுடியும் என்றும், அதிலிருந்து 30 முதல் 35 விழுக்காடு எரிபொருள் தயாரிக்க முடியும் என்றும் கூறினார்.
இத்தாவரத்தை முறையாக பயிர் செய்தால் 50 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து விளைச்சலை பெறமுடியும் என்றும் வெங்கடாச்சலம் கூறினார்.