டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் தமிழகத்தில் செயல்படும் 8 அருங்காட்சியகங்களுக்கு காப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கு பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், வேலூர், நெல்லை உள்பட 20 இடங்களில் அரசு அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. இங்கு விலங்கியல், வேதியியல், தொல்பொருள் ஆய்வு, இயற்பியல், மண்ணியல் என்று பல்வேறு பிரிவுகளில் காப்பாளர்கள் பணிபுரிகிறார்கள்.
அதுபோல மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, திருச்சி, நாகப்பட்டினம் உள்பட 8 அருங்காட்சியகங்களில் காப்பாளர் பணி இடங்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. இந்த நிலையில், காலி இடங்களை உடனடியாக நிரப்ப அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த 8 காலி இடங்களும் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. காப்பாளர் பிரிவுக்கு தக்கவாறு வரலாறு, தொல்லியல், இயற்பியல் பட்டதாரிகளும், ஜியாலஜி, வேதியியல் முதுநிலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வேதியியல், ஜியாலஜி பிரிவுகளில் காப்பாளர் பணி இடம் காலியாக உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். போட்டித்தேர்வு பற்றிய டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.