முன்னணி பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 1,000 எழுத்தர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்களை வங்கியின் இணைய தளமான www.iob.in வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மற்ற முறைகள் மூலம் அனுப்ப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பதிவு டிசம்பர் 6ஆம் தேதி துவங்கியுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள் டிசம்பர் 31ஆம் தேதி ஆகும். இப்பதவிக்கான எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு (2009) பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி (01-02-2009) நடைபெற உள்ளது.
மாநிலவாரியான பணி காலியிடங்கள், தேர்வு மையங்கள், தகுதி விவரங்கள், கல்வித் தகுதி, வயது, இட ஒதுக்கீடு மற்றும் தேர்வு கட்டணம் போன்ற விவரங்களை வங்கியின் இணையதளமான www.iob.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், கடந்த டிசம்பர் 6ஆம் தேதி வெளியான எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் மற்றும் ரோஜ்கார் சமாசார் செய்திதாள்களில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 340 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 64 இடங்களும், பழங்குடியினருக்கு 3 இடங்களும், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 91 இடங்களும், பொதுப் பிரிவினருக்கு 182 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோருக்கு ரூ. 50ம், இதர பிற்பட்ட வகுப்பினர் உள்பட மற்றவர்களுக்கு ரூ.250ம் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.