வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மூலம் குறுகியகால தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் மைதிலி ராஜேந்திரன் திங்களன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகிய கால தொழிற்பயிற்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் வாயிலாக அளிக்கப்படுகிறது. சென்னை நகரில் கிண்டி, வட சென்னை மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படும்.
கணினி இயக்கம், குளிர்சாதனப் பெட்டி, குளிரூட்டிக் கருவி (ஏ.சி.), தொலைக்காட்சிப் பெட்டி பழுது பார்த்தல், தையற்பயிற்சி, பொருத்துனர் (பிட்டர்), பற்றவைப்பாளர் (வெல்டர்), நான்கு சக்கர வாகன பழுது பார்த்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படும்.
இதில் சேர விரும்புவோர் குறைந்த பட்சம் 5 ஆம் வகுப்பு, அதிகபட்சமாக பிளஸ் 2 படித்திருக்க வேண்டும். வயது 40-க்குள் இருக்க வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியினர் எனில் வயது 45 ஆக இருக்கலாம்.
இப்பயிற்சிகள் வரும் 25 ஆம் தேதி கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொடங்குகிறது. இதில் சேர விரும்புவோர் உரிய சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். இப்பயிற்சி இரண்டு அல்லது மூன்று மாதங்கள் நடைபெறும்.