போராட்டம் நிறைந்த இந்த வாழ்க்கையில், எதிர் நீச்சல் போட்டுத்தான் உச்சத்தை தொட வேண்டியுள்ளது. இந்த வெற்றிக்காக நல்ல இலக்கைத் தேடுவோருக்கு விமானத்துறை ஒரு வரப்பிரசாதம் ஆகும்.எரிபொருள் விலையுயர்வு, கட்டண அதிகரிப்பு, அதிகரித்து வரும் போட்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விமானத்துறையில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஒருபுறம் இத்துறையில் மந்தப்போக்கு தொடர்ந்தாலும், மற்றொரு புறம் இன்Gகு வேலைவாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வு உள்ளிட்டவை காரணமாக, இங்கு விமானப் போக்குவரத்து துறைக்கு சிறப்பான எதிகாலம் இருப்பதாக, இத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய விமானத்துறை தற்போது சந்தித்து வரும் நெருக்கடி தற்காலிகமானது தான் என்றும், இதில் இருந்து மீண்டு நல்லதொரு நிலையை அது எட்டும் என்றும் அவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பின் சமீபத்திய கணக்கின்படி விமானப் போக்குவரத்துத் துறையில், இந்தியாவின் வர்த்தகம் இவ்வாண்டு 5.1 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதில் இருந்து 5.6 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள திறமை வாய்ந்த மனித வளத்தையும், விமானத்துறை வளர்ச்சியையும் கணக்கிட்டுப் பார்த்தால், இத்துறையில் கால் பதிப்பவர்களுக்கு வளமான எதிர்காலம் உண்டு. இந்தியாவில் மட்டுமின்றி உலகளாவிய அளவில் இத்துறையில் மாணவர்கள் பிரகாசிக்க முடியும் என்கிறார், பிரிட்டனைச் சேர்ந்த 'கேபின் க்ரு டைரக்ட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் எலிஸ்.
விமானத்துறையில் உள்ள பிரகாசமான வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு, சுற்றுலாத்துறை தொடர்புடைய கல்வி நிறுவனங்கள், இத்துறைக்கான பயிற்சி வகுப்புகளை முனைப்புடன் நடத்தி வருகின்றன.
மும்பையைச் சேர்ந்த குயோனி சுற்றுலா அகாடெமி என்ற நிறுவனம், விமானப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக 'கேபின் க்ரு டைரக்ட்', துபாயைச் சேர்ந்த இன்டர்நேஷனல் ஏர்லைன் அன்ட் பிசினஸ் அகாடெமி (ஐ.ஏ.பி.ஏ.) ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி குயோனி நிறுவனம் 4 மாத பட்டயப்படிப்பு (டிப்ளமோ) வகுப்புகளை நடத்துகிறது. தினமும் 2 மணி நேரம் என வாரத்திற்கு 4 நாட்கள் இந்த வகுப்புகள் நடக்கிறது.
இதுகுறித்து அந்நிறுவன முதல்வர் ஸ்மீதா குல்வாடி கூறுகையில், "சர்வதேச தரத்தில் இப்பயிற்சிகள் அமைந்திருக்கும். இந்திய மாணவர்களுக்கு தரமான பயிற்சியை அளித்து விமானத்துறையில் பிரகாசிக்கச் செய்வதற்காக பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்" என்றார்.
இப்பயிற்சியில் சேருவதற்கு 18 வயது முதல் 24 வயது உடைய மேல்நிலைக் கல்வி முடித்த மாணவர்கள் தகுதியுடையவர்கள். நல்ல உடல் வாகு, ஆங்கிலத்தில் புலமை கொண்டிருக்க வேண்டும். மேலு ஆண்கள் 5 அடி 7 அங்குலம் உயரமும், பெண்கள் 5 அடி 2 அங்குலம் உயரமும் கொண்டிருக்க வேண்டும். மருத்துவப் உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழகத்தில், எண். 26 எத்திராஜ் சாலை, சென்னை - 105 என்ற முகவரியில் குயோனி சுற்றுலா அகாடமியின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதை அணுகி விமானத்துறை வேலைவாய்ப்பு பயிற்சி குறித்த மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.