வனவளம் என்பது மிகச்சிறந்த அனுபவத்தைத் தரக்கூடிய துறையாகும். வனத்தை உருவாக்குவது, அவற்றைப் பாதுகாப்பது, விஞ்ஞானப்பூர்வ வனநிர்வாகம் மற்றும் வன ஆதாரங்களை பயன்படுத்துதல் போன்றவை சுவாரஸ்யத்தை அளிக்கக்கூடியதாகும்.
வனத்துறை நிர்வாகத்தை மேற்கொள்வதற்காக வன நிபுணர்களுக்குப் பயிற்சியளித்தல், இந்தியாவில் கடந்த 1864ம் ஆண்டில் தொடங்கியது.
பல்கலைக்கழக அளவில் வனத்துறை கல்வியானது, அந்தந்த மாநிலங்களில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்களில் கடந்த 1985ம் ஆண்டில் பி.எஸ்.சி 4 ஆண்டு கல்வியாக தொடங்கப்பட்டது.
பந்த்நகர் மற்றும் கோவை வேளாண்பல்கலைக்கழகத்தில் 1986ம் ஆண்டிலும், தொடந்து புவனேஸ்வரம் ஓயுஏடி, ஜபல்பூரில் உள்ள ஜேஎன்கேவிவி-யில் 1987ம் ஆண்டிலும் வனத்துறை படிப்புகள் தொடங்கப்பட்டன.
ஆனால் தற்போது பெரும்பாலான மாநில வேளாண் பல்கலைக்கழகங்களில் வனத்துறை தொடர்பான படிப்புகளும், இதேபாடத்தில் முதுநிலைப் படிப்புகளும், வேளாண்வனத்துறை தொடர்பான பட்டப்படிப்புகளும் சிறப்புக் கல்வியாக சேர்க்கப்பட்டு நடைபெறுகின்றன.
சமீபகாலமாக சில பாரம்பரிய பல்கலைக்கழகங்களும் வனத்துறை கல்வியைத் தொடங்கியுள்ளன.
ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்கினை வனத்துறை அளிப்பதாக சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.
வனத்துறையில் நிலவும் மோசமான நிலையை எதிர்கொள்ள, திறமைவாய்ந்த மனிதவளம் தேவைப்படுவதுடன் அதற்கான நடவடிக்கை திட்டங்களையும் ஆராய்ச்சி மூலமான கொள்கைகளை உருவாக்கி மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் வனவளம் / வேளாண்வனவள நிர்வாகம் முக்கியப் பங்காற்றுகிறது எனலாம்.
தற்போதைய வனத்துறையின் தேவைக்கேற்ப அந்த துறை தொடர்பான பாடத்திட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
வனத்துறை தொடர்பான ஆராய்ச்சி, பயிற்சி, கல்வி ஆகியவற்றை டேராடூனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய வனத்துறை ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகம் மேற்கொண்டுள்ளது.
வனத்துறை அமைச்சகத்தின் கீழ் எட்டு வன ஆராய்ச்சிக் கழகங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் செயல்படுகின்றன.
வனத்துறை தொடர்பான இளநிலைப் படிப்புகள், முதுநிலைப் படிப்புகள், முனைவர் திட்ட ஆராய்ச்சிகள் போன்றவை பல்வேறு மாநில வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலம் அளிக்கப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பிஎஸ்சி 4 ஆண்டு தொழில் படிப்புகளே சாதாரணமாக நடத்தப்படுகின்றன.
மாநில வேளாண் பல்கலைக்கழகம் தவிர்த்து, மற்ற பல்கலைக்கழகங்களில் இந்தப் படிப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. வனத்துறை படிப்புடன் சுற்றுப்புற சூழல், வாழ்வாதாரப் பாதுகாப்பும் பாடத்திட்டங்களில் அடங்கும்.
எனவே வனத்துறை தொடர்பான படிப்பை முடித்தால் வேலைவாய்ப்பு நிச்சயம். கணினி, ஐ.டி. மருத்துவம் என்று செல்வதைக் காட்டிலும் இதுபோன்ற அரிய, அதேநேரத்தில் கண்டிப்பாக வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தக் கூடிய படிப்புகளில் சேர்ந்து நாமும் வளம் பெறுவதுடன் நாட்டையும் வளப்படுத்துவோம்.