தமிழகத்தில் தனியார் தொழிற்பயிற்சி மையம், தொழிற் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தனியார் தொழிற்பயிற்சி மையம், தொழிற் பள்ளிகள் அமைப்பு ஆகியவை அரசு தொழிற் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப்போன்று கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும், தனியார் தொழிற்பயிற்சி மையம், தொழிற் பள்ளிகளில் பயின்று வரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
அந்த அமைப்புகளின் மாநிலத் தலைவர் கே.சிவகுமார், பொதுச்செயலாளர் ஆர்.தினகரகுமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 625 தனியார் தொழிற்பயிற்சி மையங்கள், 725 தனியார் தொழிற் பள்ளிகள் உள்ளன. ஆனால் அதிக அளவிலான மாணவர்கள் அரசு வழங்கும் எந்தவிதமான சலுகைகளும் இல்லாமலேயே பயிற்சியை முடிக்கின்றனர்.
தமிழ்நாடு மின்சாரவாரியம், குடிநீர்வாரியம், மாநகராட்சி, நகராட்சி போன்ற அரசாங்கம் சம்பந்தப்பட்ட துறைகளில் தொழில் சார்ந்த வேலைவாய்ப்புகளில், தனியார் தொழில் மையங்களில் பயின்று தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தனியார் தொழில் மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், ரயில் பாஸ், மிதிவண்டி ஆகியவை வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளதாக கூறினர்.