ஆசிய கண்டத்தில் மண்டல விமான சேவை நிறுவனங்கள் வாங்கி குவிக்கும் விமானங்களால் பெருமளவு வேலை வாய்ப்பு வளைகுடா நாடுகளில் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
துபாயில் நடைபெற்று வரும் விமானக் கண்காட்சியில் மண்டல விமான நிறுவனங்கள் நேற்று மட்டும் 271 விமானங்களுக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளன. ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்துக்கு மட்டும் 49 பில்லியன் டாலர் அளவுக்கு ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
துபாய் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மட்டும் தலா 100 விமானங்களை வாங்க ஏர்பஸ்-போயிங் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதேபோன்று விமான சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் 22 ஏர்பஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சீனா, இந்தியா, கிழக்கு ஐரோப்பாவுக்கு அடுத்த படியாக வளைகுடா நாடுகளின் வழித்தடத்தில் தான் விமான பயணிகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இது ஆண்டுக்கு 8 விழுக்காடு என்ற அளவில் உள்ளது.
தற்போது வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் விமான சேவைத் துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.